சென்னை: இலங்கை கொழும்பு நகரில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இன்று அதிகாலை சென்னையில் தரை இறங்குவதற்காக 146 பயணிகளுடன் வந்து கொண்டு இருந்தது. அந்த விமானம் சென்னை விமானநிலையத்தில் தரை இறங்குவதற்காக உயரத்தைக் குறைத்து தாழ்வாக பறக்கத்தொடங்கியது. அப்போது அந்த விமானத்தின் முன்பகுதியில் பைலட் கேபினை நோக்கி சக்திவாய்ந்த லேசா் லைட் ஒளி பாய்ந்து அடித்தது.
அந்த லேசா் ஒளி, விமானத்தை இயக்கிக்கொண்டிருந்த பைலட் கண்களுக்கு நேராக அடிக்கப்பட்டது. இதனால் பைலட் நிலைகுலைந்து திணறினாா். ஆனாலும், பைலட் சமாளித்துக் கொண்டு, மிகவும் சாமா்த்தியமாக செயல்பட்டாா். விமானத்தை மிகவும் பத்திரமாக சென்னை விமானநிலையத்தில் தரையிறக்கினாா்.
இதனால் விமானத்தில் இருந்த 146 பயணிகள், 7 விமான சிப்பந்திகள் உட்பட 153 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். இதையடுத்து விமானி இது சம்பந்தமாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தார். கட்டுப்பாட்டு அறை அலுவலர்கள், ரேடாா் கருவிகள் மூலமாக எந்தப் பகுதியிலிருந்து ஒளி வந்தது என்று ஆய்வு செய்ததில் பழவந்தாங்கல் பகுதியிலிருந்து இந்த சக்திவாய்ந்த லேசா் ஒளி வந்திருப்பது தெரியவந்தது.
விமானியையே நிலைகுலைய செய்த சக்திவாய்ந்த லேசர் ஒளி... நல்வாய்ப்பால் உயிர்தப்பிய பயணிகள்! - indigo airlines
இலங்கையிலிருந்து சென்னைக்கு 153 பேருடன் வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க தாழ்வாக பறந்தபோது சக்திவாய்ந்த லேசா் லைட் ஒளியானது, பைலட் கண்களை நோக்கியடிக்கப்பட்டதால் நிலைகுலைந்த பைலட் சாமா்த்தியமாக விமானத்தை தரையிறக்கினாா்.
பழவந்தாங்கலில் இருந்து வந்த ஒளி:பழவந்தாங்கல் பகுதியில் உள்ள உயரமான கட்டடத்திலிருந்து சக்தி வாய்ந்த லேசா் ஒளியை பீய்ச்சியடித்துள்ளனா் என்று தெரியவந்தது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனமும், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அலுவலர்களும் புகார் செய்துள்ளனர். அதன்பேரில் சென்னை விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்துகின்றனா்.
இதுபோன்ற சம்பவங்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்கெனவே நடந்துள்ளன. அப்போது பரங்கிமலைப்பகுதியில் இருந்து லேசா் லைட் ஒளியை விமானத்தின் மீது அடிக்கும் சம்பவங்கள் 2 முறை நடந்துள்ளன. அது சம்பந்தமாக போலீசார் 2 பேரை கைது செய்தனா். தற்போது 5 ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் அதைப் போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.இது சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தாய்லாந்திலிருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட அரியவகை பறக்கும் அணில்கள் - விமானநிலையத்தில் சுங்கத்துறையினா் பறிமுதல்