சென்னை:தமிழ்நாட்டில் 12,000 மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இருப்பினும், பிற மாநிலங்களைச் சேர்ந்த கல்வி நிறுவனங்கள், தமிழ்நாட்டில் அதிகமான பள்ளிகளை பல்வேறு நகரங்களில் நடத்தி வருகின்றன. அவற்றில் பல பள்ளிகள் அரசின் அனுமதி இல்லாமல் இயங்குவதாக பள்ளிக்கல்வித்துறைக்கு தெரிய வந்தது.
குறிப்பாக சிபிஎஸ்இ, இன்டர்நேஷனல் பள்ளிகள் மற்றும் ஐசிஎஸ்சி பள்ளிகள் போன்றவற்றை தொடங்குவதற்கு தடையின்மை சான்று தமிழ்நாடு அரசிடம் இருந்து பெற வேண்டும். அவ்வாறு பள்ளிக்கல்வித்துறையிடம் இருந்து ஒரு பள்ளியின் பெயரில் தடையின்மைச் சான்று பெற்றுவிட்டு, அந்தப் பள்ளியின் கிளை பள்ளிகளாக பல நகரங்களில் அதே பெயரில் பள்ளியை தொடங்கி நடத்தி வருகின்றனர்.
அதேநேரம் பிற தேர்வு வாரியங்களில் மாணவர்கள் தேர்வு எழுதச் செல்லும்போது, எந்த பள்ளியின் இருப்பிட பெயரில் அங்கீகாரம் பெற்றுள்ளதோ, அந்த பள்ளியில் இருந்து மாணவர்களை தேர்வு எழுத வைக்கின்றனர். ஆனால், பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகள் குறிப்பிட்ட பள்ளியில் மட்டுமே படிக்கின்றனர் என்பது மட்டுமே தெரியும்.