தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நல்ல திரைப்படங்களுக்கு மொழி தடையில்லை - எல்.முருகன்!

நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களுக்கு மொழி தடையில்லை என்றும் திரைத்துறையினருக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும் என்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

எல்.முருகன்
எல்.முருகன்

By

Published : Apr 11, 2022, 2:54 PM IST

சென்னை:தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு அமைப்பின் சார்பில் தென்னிந்திய தொழில் கூட்டமைப்பு மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.

இறுதி நாளான நேற்று (ஏப்.10) மத்திய இணையமைச்சர் எல்.முருகன், சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, நடிகர் சங்க தலைவர் நாசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு இணையமைச்சர் எல்.முருகன் ஐகான் விருதை வழங்கி கௌரவித்தார். மேடையில் பேசிய நடிகர் சங்க தலைவர் நாசர், "கற்றலில் இருக்கும் செல்வம் வேறெதிலும் இல்லை.

ரகுமானை பற்றி புதிதாக சொல்ல ஒன்றும் இல்லை. இசைக்காக அல்ல, ஆஸ்கார் விருது பெற்றமைக்காக அல்ல, தான் பெற்ற இசையறிவை பிறர் கற்க இசைக்கல்லூரி நிறுவியதற்காக அவரை பாராட்டுகிறேன்.

ஆர்ஆர்ஆர் படம் 1000 கோடி ரூபாய் வசூல் ஈட்டியுள்ளது என்கிறார்கள். மற்ற மொழி படங்கள் உருவாகும் விதத்தை விட இந்தி படங்கள் உருவாகும் விதம் மாறுபட்டு உள்ளது. சினிமா மொழி சார்ந்த ஒன்றாக இல்லாமல் ஒருவரை ஒருவர் அறிந்து மற்றவரை மேன்மை பெற செய்ய வேண்டும்.

சினிமாவில் 90% பேர் தினக்கூலிகள்: டிடிஎஸ் வரிச்சுமையை 1.5% லிருந்து மீண்டும் 10% மாக வைத்துள்ளார்கள். சிறு படங்களுக்கு வரிக்குறைப்பு உதவிகரமாக இருக்க வேண்டும். இதுகுறித்து நிதியமைச்சருடன் எங்கள் பிரதிநிதிகள் பேசி உள்ளார்கள்.

நீங்களும் இதை தெரிவிக்க வேண்டும் என இணையமைச்சர் எல்.முருகனுக்கு நடிகர் நாசர் வேண்டுகோள் விடுத்தார்".

தென்னிந்திய தொழில் கூட்டமைப்பு மாநாடு

பின்னர் பேசிய ஆர்.கே.செல்வமணி, "1000 திரைப்படங்கள் தயாரிக்கும் இந்திய சினிமாவில் 600 திரைப்படங்களை தென்னிந்திய சினிமா தருகின்றன. தங்கத்தை வாங்கும் போது அதற்குரிய பணத்தை கொடுத்து வாங்குகிறோம். ஆனால் சினிமாவை அப்படி வாங்குவதில்லை. கரோனாவில் மற்ற துறைக்கு நிவாரணம் கொடுத்தார்கள். ஆனால் சினிமா தொழிலுக்கு தரவில்லை.

இங்கு 90% பேர் தினக்கூலிகளாக உள்ளனர். எங்களுக்கு உரிய சட்ட பாதுகாப்பை அரசு வழங்கினால் நாங்களே எங்களை புனரமைத்துக் கொள்வோம். அமைச்சர் இந்த துறையை கட்டமைப்போடு கொண்டு செல்ல உதவ வேண்டும்" என்றார்.

ஒரே இந்தியா தான்: தொடர்ந்து பேசிய ஏ.ஆர்.ரகுமான், " 7 ஆண்டுகளுக்கு முன் மலேசியா சென்றிருந்தேன். அங்கு ஒருவர் எனக்கு வடஇந்தியா திரைப்படங்கள் பிடிக்கும் என்றார். எனக்கு அவர் தென்னிந்தியாவின் படங்களை பார்த்தாரா என்று தோன்றியது. எல்லா படங்களையும் ஒன்று போல் பார்க்க வேண்டும். இந்தியாவில் எங்கிருந்தாலும் இந்தியா தான். இதில் வட இந்தியா தென்னிந்தியா என்று இல்லை" என்றார்.

நிகழ்ச்சியின் இறுதில் பேசிய இணையமைச்சர் எல்.முருகன், "சினிமாவில் வெள்ளித்திரை, ஓடிடி, டிடிஎச் என வாய்ப்புகள் உள்ளன. அதே போல அனிமேஷன், GFX ஆகிய துறைகளிலும் வாய்ப்புகள் உள்ளன. ஆர்ஆர்ஆர், புஷ்பா, பாகுபலி ஆகிய படங்கள் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. நல்ல கதையம்சம் கொண்ட படமாக இருந்தால் மொழி தடையில்லை. திரைத் துறையினருக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும்" என்றார்.

இதையும் படிங்க: தமிழ் இசைக்கு திமுக அரசு உரிய முக்கியத்துவம் அளிக்கும் - அமைச்சர் தங்கம் தென்னரசு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details