அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று (ஆகஸ்ட் 5) நடைபெற்றது. இதனை இந்தியா முழுவதும் உள்ள மக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு அங்கமாக சமூக வலைதளங்களிலும் ஜெய் ஸ்ரீராம் உள்ளிட்ட ஹேஸ்டேக்குகளின் கீழ் மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்தச்சூழ்நிலையில், #TamilsPrideRavanaa #LandOfRavana என்ற ஹேஸ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டாகியுள்ளன. இந்த ஹேஸ்டேக்குகளின் கீழ், கருத்துகளைப் பதிவிட்டவர்கள் பெரும்பாலும் தமிழர்களாக உள்ளனர். ராவணன் குறித்து படத்தில் பேசப்பட்ட காட்சிகள், அரசியல் தலைவர்கள் பேசிய பேச்சுகள், ராமரை விமர்சித்த பேச்சுகள் உள்ளிட்டவற்றை இந்த ஹேஸ்டேக்குகளின் கீழ் பதிவிட்டு வருகின்றனர்.
ராமனுக்கு எதிராக ராவணனை முன்னிறுத்துவது தமிழ்நாட்டிற்கோ, தமிழர்களுக்கோ புதிதல்ல. ராவணன் வாழ்ந்ததாக கருதப்படும் தென்திசை நோக்கி அம்புகளை மக்கள் எய்தியும், ராவணனின் உருவ பொம்மையை எரித்தும் வடமாநிலத்தில் 'ராம லீலா' கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்வினையாக பெரியார் திடலில், 1974ஆம் ஆண்டு மணியம்மை தலைமையில் 'ராவண லீலா' நடத்தப்பட்டது. அதில் ராமர், லட்சுமணன், சீதை ஆகியோரின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. ராவணன், கும்பகர்ணன் ஆகியோர் வீரர்களாக காட்டப்பட்டனர்.