நில மோசடி விவகாரம்: சூரியிடம் போலீசார் விசாரணை - சூரி லேட்டஸ்ட் செய்திகள்
சென்னை: நில மோசடி விவகாரம் தொடர்பாக நடிகர் சூரியிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

நகைச்சுவை நடிகர் சூரி நிலம் வாங்கித் தருவதாகக் கூறி காவல்துறை முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா, படத் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜ் ஆகிய இருவரும் மோசடி செய்ததாக அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்தப் புகாரின் பேரில் காவல் துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்றத்தை நாடி நீதிமன்ற உத்தரவின் பேரில் அடையாறு காவல் நிலையத்தில் பண மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் சூரியை விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மனும் அனுப்பி இருந்தனர்.
இந்தச் சம்மனின் அடிப்படையில் சூரி அடையாறு காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் சுமார் இரண்டு மணி நேரம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
இந்தப் பண மோசடி எவ்வாறு நடந்தது? எங்கு நடந்தது? எவ்வளவு பணம் கைமாறியது உள்ளிட்ட விவரங்களை சூரியிடம் கேட்டு எழுத்துபூர்வமாகப் பதிவுசெய்துள்ளனர்.
இதனையடுத்து பண பரிமாற்றம் தொடர்பான ஆவணங்களைச் சரிபார்க்கும் பணி நடைபெறும் எனவும் அதன் பின்னர் படத் தயாரிப்பாளர், முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா ஆகியோருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.