நடிகை குட்டி பத்மினி மீது நில மோசடி புகார்: அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவு! - நில மோசடி வழக்குகள்
சென்னை: பாஜக நிர்வாகி நடிகை குட்டி பத்மினி மீதான நில மோசடி புகாரின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மடிப்பாக்கத்தில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான சுமார் 8 கோடி ரூபாய் மதிப்புடைய 4,800 சதுர அடி நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபு பாஷா என்பவரின் மனைவி இம்ரானா என்பவருக்கு விற்று விட்டதாக கூறி, நடிகையும், பாஜக நிர்வாகியுமான குட்டி பத்மினிக்கு எதிராக, 2011ஆம் ஆண்டு மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
ஒன்பது ஆண்டுகளாகியும் இந்த வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதால், வழக்கை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றக் கோரி, ரமேஷ் சார்பில் அவரது பவர் ஏஜண்ட் சமத காமினி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி ரவீந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரபாவதி பதிலளிக்க அவகாசம் கோரினார்.
இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நவம்பர் இறுதி வாரத்துக்கு தள்ளிவைத்தார்.