தமிழ்நாடு வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, ஒப்பந்தக்காரர் சேகர் ரெட்டியுடன் சேர்ந்து, அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி தன் நிலத்தை அபகரித்துள்ளதாகவும், எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியும், வேலூர் மாவட்டம், காட்பாடியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரும், ஜெயப்பிரகாஷ் எனும் அவருடைய தொழில்முறை நண்பரும் முன்னதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
இது தொடர்பாக முதலமைச்சருக்கு புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அம்மனுவில் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்னதாக விசாரித்தார். அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான மாநிலத் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், மனுதாரரின் புகார் குறித்து மேற்கொண்ட விசாரணையில் மனுவில் எந்தவித முகாந்திரமும் இல்லை எனத் தெரிய வந்ததாகவும், இது போன்ற மனுவை நீதிமன்றம் அனுமதிக்கக் கூடாது எனவும் வாதிட்டார்.