சென்னை:தமிழ்நாட்டில் இரண்டாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நிறைவடைந்துள்ள நிலையில், அது தொடர்பாக விளக்கமளிக்க மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் செய்தியாளரைச் சந்தித்தார்.
சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் செய்தியாளரிடம் பேசிய ஜெ. ராதாகிருஷ்ணன், "இரண்டாம் கட்ட மெகா தடுப்பூசி முகாமுக்கும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. இதுவரை மொத்தமாக 4.35 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில் 4.12 கோடி தடுப்பூசிகளை அரசே செலுத்தி உள்ளது.
தடுப்பூசி தட்டுப்பாடு
இன்றுடன் கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் தீரும் நிலையில், கூடுதல் தடுப்பூசிகளை வழங்குமாறு ஒன்றிய அரசிடம் கோரிக்கைவிடுத்துள்ளோம். தடுப்பூசித் தட்டுப்பாடு காரணமாக தற்போது தடுப்பூசி ‘death stock’ என்ற நிலைமைக்கு வந்துள்ளது.
அதாவது இருபதாயிரம் தடுப்பூசிகள் மட்டுமே தமிழ்நாட்டில் இருக்கின்றன. தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதோரின் எண்ணிக்கையும் அதிகமாகவே உள்ளதால் உடனுக்குடன் தடுப்பூசிகளை அதிகளவில் வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி உள்ளோம்.
இந்த ஆண்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்குமா என்பது குறித்து ஒன்றிய அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. விரைவில் நல்ல முடிவு எதிர்பார்க்கப்படுகிறது.
மழைக்காலம் என்பதால் அக்டோபர் வரை கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். வெளி மாநிலங்களிலிருந்து வருவோருக்கு பரிசோதனையில், நெகட்டிவ் என்று வந்தாலும் தொடர்ந்து கண்காணிக்க உத்தரவிட்டுள்ளேன்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நிறைவேறிய சிலம்பத்திற்கான முன்னுரிமை - நன்றி தெரிவிக்கும் விதமாக சிலம்பப் போட்டி