இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு சலுகைகள் வழங்கும் நோக்கத்தோடு 1953இல், காக்கா கலேஷ்கர் தலைமையில் உருவாக்கப்பட்ட ஆணையம் 2,399 சாதியினரை பிற்படுத்தப்பட்டோர் எனவும், 837 சாதியினரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் எனவும், 1995இல் அறிக்கை தாக்கல் செய்தது.
ஜவஹர்லால் நேரு அரசு, 6 ஆண்டுகள் இந்த அறிக்கையை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு, 1961இல் தள்ளுபடி செய்தது. அதன் பின்னர் 17 ஆண்டு காலம் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில், பிற்படுத்தப்பட்டோரைக் கண்டுகொள்ளவே இல்லை. பின்னர் ஜன சங்கத்தின் ஆதரவோடு 1977இல் மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆனார். அப்போது மண்டல் தலைமையில், 1979இல், பிற்படுத்தப்பட்டோருக்கான இரண்டாவது ஆணையத்தை நியமித்தார்.
அந்த ஆணையம், 1980 டிசம்பர் 31இல், 3,543 பிரிவினரைப் பிற்படுத்தப்பட்டோர் என்று அடையாளம் கண்டு அறிக்கை தாக்கல் செய்தது. முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தியும், ராஜிவ் காந்தியும், இந்த மண்டல் அறிக்கையைத் தொட்டுக்கூடப் பார்க்கவில்லை. பின்னர் பாஜகவின் 88 எம்பிக்கள் ஆதரவோடு ஆட்சியமைத்த வி.பி.சிங் அவர்கள், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசுப் பணிகளில், 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கினார். அன்று பாஜக ஆதரவு அளித்திருக்காவிட்டால், இத்தகைய சலுகை பிற்படுத்தப்பட்டோருக்கு கிடைக்காமலேயே போயிருக்கும்.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், 27 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்ததுடன், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைத்திட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன் அடிப்படையில், 1993இல் நரசிம்ம ராவ் பிரதமராக இருந்த போது, தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் உருவாக்கப்பட்டது. ஆனால் அந்த அமைப்பிற்கு எந்தவித அரசியலமைப்பு அங்கீகாரமும் வழங்கப்படவில்லை. இதை எதிர்த்து, அங்கீகாரம் வழங்கக் கோரி, 25 ஆண்டு காலமாக இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் போராடி வந்தனர்.
இந்தக் காலகட்டத்தில், திமுகவும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி ஆட்சியில் இருந்தன. இவர்கள் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களின் கோரிக்கையைக் கடைசி வரை, இவர்களின் ஆட்சி முடியும் வரை கண்டுகொள்ளவே இல்லை. ஆனால், பிரதமர் மோடி அரசியலமைப்புச் சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்து, தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு, சட்ட ரீதியான, அரசியலமைப்பு ரீதியான , முழுமையான அங்கீகாரத்தை வழங்கினார். மாநிலங்களவையில் இந்த மசோதாவை திமுக தோற்கடித்ததை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். பிற்பட்ட சமூகத்திற்கு கல்வி, வேலை வாய்ப்பு, இவற்றில் 27 சதவீத இட ஒதுக்கீட்டில், கிரீமிலேயருக்கான வருவாய் உச்ச வரம்பு 6 லட்சமாக இருந்ததை, மோடி 8 லட்சமாக உயர்த்தினார்.
திமுக, காங்கிரஸ் கூட்டணியில் 1993 முதல் 2014 வரை, 20 ஆண்டுகளில் 1 லட்சம் ரூபாயாக இருந்த உச்ச வரம்பை, ரூபாய் 6 லட்சமாக மட்டுமே மாற்றின. ஆனால் மோடி ஆட்சிக்கு வந்த 3 வருடத்திலேயே 8 லட்சம் ரூபாயாக உயர்த்தினார். இப்போது பாஜக அரசு, உச்ச வரம்பை உயர்த்தவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் கபட நாடகம் ஆடுகிறார்.
மருத்துவ மேற்படிப்பில், அகில இந்திய ஒதுக்கீட்டில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக ஒதுக்கீடு அளிக்க முடியாது என்று உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளதாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தவறான பொய்ப் பிரச்சாரத்தை மேற்கொண்டுவருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்ட விவரங்களின் அடிப்படையிலேயே தீர்ப்பு தரப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு, அகில இந்திய ஒதுக்கீட்டில், இட ஒதுக்கீடு வழங்க அளிக்கப்பட்ட தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
2015இல் உச்ச நீதிமன்றத்தில், சலோனிகுமார் என்பவரால், தொடரப்பட்ட வழக்கில், தங்களை இணைத்துக் கொள்ளாமல், ஒதுங்கி வேடிக்கை பார்த்துவிட்டு, இப்போது மருத்துவப் படிப்பிற்கான அகில இந்திய கலந்தாய்வு கூட்டம், கடந்த ஏப்ரல் மாதமே முடிந்துவிட்ட நிலையில், திடீரென்று தடை கோரி வழக்கு தாக்கல் செய்திருப்பது உள்நோக்கம் கொண்ட அரசியல் நாடகம் என்பதை மக்கள் அறிவார்கள்.
உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் இது குறித்து நடைபெறும் வழக்குகளில், மத்திய அரசு, இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதிசெய்து, பிரமாணப் பத்திரம் சமர்ப்பித்துள்ளது. திமுக, காங்கிரஸ் கூட்டணிகள், செய்த துரோகம் வெளிவந்துவிடும் என்ற எண்ணத்தில், இப்போது பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, திமுகவும், அதன் தலைவர் ஸ்டாலினும் மக்களிடம் தவறான பொய்ப் பிரச்சாரம் செய்வதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.