சென்னை நுங்கம்பாக்கம் அறநிலையத்துறை ஆணையா் அலுவலகத்தில் இரண்டாம் நாளாக அமைச்சா் சேகா்பாபு தலைமையில் சீராய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளா்களிடம் அமைச்சா் சேகா்பாபு கூறுகையில், "மானியக்கோரிக்கையில் 2021-22, 2022-23 ஆண்டுகளுக்கான அறிவிப்புகளில் மொத்தமாக 4,400 பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டோம்.
2021-22 அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் மொத்தமாக 1,800 பணிகளில் 40 சதவீதத்திற்கு மேலான பணிகள் நிறைவுபெற்றிருக்கின்றன. 50 சதவீதம் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. 10 சதவீதப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகளையும் விரைந்து முடிக்க அறிவுரை வழங்கப்பட்டது. கடந்தாண்டு 2 கோயில்களில் முழு நேர அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்தாண்டு கூடுதலாக 3 கோயில்களில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
அந்த வகையில் ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி கோயில், திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோயில், மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ஆகியவற்றில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. நெல்லையப்பர் கோயில் விழாக்களில் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தோம். இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது.
13 கோயில்களுக்கு பேட்டரி கார்களை வழங்குவது என்று முடிவு செய்யப்பட்ட நிலையில், அடுத்த மாதத்திற்குள் வழங்கப்படும். சுமார் 1,500 கோயில்களில் ரூ.1,000 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும். அதேபோல 1,000 ஆண்டுகள் பழமையான கோயில்களுக்கும் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், அடுத்தாண்டு ஜனவரி மாதம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோயிலில் குடமுழுக்கு நடத்தப்படும்" என்றார்.
இதையும் படிங்க: குடியரசுத் தலைவர் தேர்தல் - சென்னை சட்டப்பேரவை வளாகத்தில் ஏற்பாடுகள் தீவிரம்!