சென்னை: தயாரிப்பாளர் ராபின்சன் தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த்ராஜ் இயக்கத்தில், விஜய் டிவி அசார், யோகிபாபு, மனிஷா ஜித் நடித்துள்ள காதல் காமெடி திரைப்படம் 'கடலை போட பொண்ணு வேணும்'.
ஒரு இளைஞனின் காதல் தேடலாக இன்றைய இளைய தலைமுறையைக் கவரும் அழகான காதல் கதையாக, ஒரு இரவில் நடக்கும் கதையில், காமெடி நிறைந்த கமர்ஷியல் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (பிப்ரவரி 28) தமிழ் சினிமா பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
ரிலீஸ் செய்ய முடியாமல் தவிப்பு
இவ்விழாவினில் தயாரிப்பாளர் ராபின் பேசியதாவது, "ஒரு படத்தை எடுத்து வெளியிடுவது எவ்வளவு கஷ்டம் என்பதை இந்தப்படத்தில் தான் தெரிந்து கொண்டேன். நிறைய பேர் படமெடுத்து ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள். இங்கு மேடையில் இருக்கும் பெரியவர்கள் அந்தக் கஷ்டங்களை அறிந்தவர்கள், அவர்கள் இங்கு எங்களை வாழ்த்த வந்திருப்பது மகிழ்ச்சி.
எங்கள் குழு மிக கடினமாக உழைத்து இப்படத்தை எடுத்துள்ளோம். அடுத்த படத்தை இன்னும் பெரிதாக செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அடுத்த மாதம் இப்படத்தை திரையரங்கில் வெளியிடவுள்ளோம். இந்தப் படத்திற்கு உங்கள் ஆதரவைத் தந்து எங்களை வாழ்த்தி வெற்றி பெறச் செய்யுங்கள் நன்றி" என்றார்.
அசாரின் நடிப்பு உற்சாகம்
அரசியல் பிரமுகர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது, "இங்கு என்னை நடிகர் என்று இங்கு மேடைக்கு அழைத்தபோது, எனக்கு கூச்சமாக இருந்தது. நான் நடிகன் அல்ல. தமிழ்நாட்டில் தலை சிறந்த பேச்சாளர்களில் ஒருவனாக என்னை வளர்த்துக் கொண்டவன். நான் இரண்டு திரைப்படங்களில் தான் நடித்து இருக்கிறேன். இந்தப்படத்திலும் நடித்துள்ளேன். இந்தப்படத்தில் தம்பி அசாரின் நடிப்பு உற்சாகம் கொள்ள வைக்கிறது. காட்சிகளைப் பார்க்க பிரமிப்பாக குதூகலம் தருவதாக அமைந்துள்ளது. ஒரு படத்தை எடுத்து வெளியிட கோடிக்கணக்கில் பணம் தேவைப்படும் எனும் நிலையை ரசிகர்கள் மாற்றிக்காட்ட வேண்டும். தம்பி அசாரின் நடிப்பில் இப்படம் அதனை மாற்றிக்காட்டும். இந்தப்படம் காதலை நகைச்சுவையுடன் ரசிக்கும்படி சொல்லியிருக்கிறது. 'கடல போட பொண்ணு வேணும்' படம் பற்றி பேச எனக்குத் தகுதி இல்லை. ஏனெனில், நான் 'கடல' போட்டதில்லை. காதலுக்கு கடலைப் போடுவதைத் தாண்டி நிறைய இருக்கிறது என நம்புபவன் நான். காதல் புனிதமானது. மகத்தானது. அதை சமகாலத்தில் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் தம்பி ஆனந்தராஜன் சொல்லியுள்ளார். அனைவரையும் கவரும் படமாக இப்படம் இருக்கும் என நம்புகிறேன். அனைவருக்கும் வாழ்த்துகள் நன்றி" என்றார்.
கோடிகளைக் கொட்டும் தயாரிப்பாளர்
தயாரிப்பாளர் ராஜன் பேசியதாவது, "இப்படத்தின் பாடல்கள் பார்த்தேன் ரொம்பவும் அருமையாக இருந்தன. தம்பி அசார் அழகான நடிப்பில் ஈர்க்கிறார். தயாரிப்பாளர் இல்லாமல் சினிமா இல்லை. தயாரிப்பாளரை ஏமாற்றாதீர்கள். அனைவரும் இணைந்து ஈகோ இல்லாமல் வேலை பார்த்தால் சினிமா ஒரு அருமையான தொழில். ஆனால், இங்கு அது நடப்பதில்லை. தயாரிப்பாளர் குஞ்சுமோன் வந்துள்ளார். இயக்குநர் ஷங்கரை உருவாக்கியவர். ஆனால் அவர் இப்போது படமெடுப்பது இல்லை. கோடிகளை கொட்டும் தயாரிப்பாளர்களுக்கு இங்கு மரியாதை இல்லை. தயாரிப்பாளருக்கு லாபம் வந்தால் மீண்டும் படம் தான் எடுப்பார்கள். ஆனால் ஹீரோவுக்கு கொடுக்கும் பணம் என்னவாகிறது?. திரும்ப வருவதே இல்லை. கடலை போட பொண்ணு வேணும். ஆனால், இந்தக் காலத்தில் பெண்ணிடம் கடலைப் போட்டுவிட்டு, கடலில் போட்டு விடுகிறீர்களே? காதல் செய்து ஏமாற்றாதீர்கள். கடினமாக உழைத்து படமெடுத்துள்ளார்கள். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். வாழ்த்துகள்" என்றார்.
நடிகை ரிஷா பேசியதாவது, "இந்தப் படத்தில் ஒரு பாடலில் நான் ஆடியிருக்கிறேன். தீனா மாஸ்டர் கோரியோகிராபி செய்துள்ளார். இயக்குநர் ஆனந்த்ராஜ் சார் தான் இந்த வாய்ப்பைத் தந்தார். உங்கள் எல்லோருக்கும் இந்தப்படம் பிடிக்கும் நன்றி" என்றார்.
தயாரிப்பாளர்களை யாரும் மதிப்பதில்லை
தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் பேசியதாவது, "திரைப்பட விழாக்களை பார்த்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. மீண்டும் விழாக்கள் நடப்பது மகிழ்ச்சி. இந்தப்படத்தின் பாடல்கள் பார்த்தேன். அருமையாக இருக்கிறது. தயாரிப்பாளர் நிறைய செலவு செய்துள்ளார். ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் நிறையப் படங்கள் நான் விநியோகம் செய்திருக்கிறேன். கேரளாவில் பண்ணியிருக்கிறேன். ஒரு படம் எப்படி வியாபாரம் ஆகிறது என்பது தெரியும். மணிரத்னம் உடைய நாயகன் படத்தை முதலில் நான் விநியோகம் செய்ய மாட்டேன் எனச்சொன்னேன். அவரது அண்ணன் ஜீவி நீங்கள் தான் பண்ண வேண்டும் என்றார். அதற்காக பண்ணினேன். நாயகன் படம் எனக்கு லாபம் இல்லை.
இங்கு தயாரிப்பாளர்களை யாரும் மதிப்பதில்லை. யாரும் உதவுவதில்லை. மணிரத்னம், ரஜினி யாரும் ஜீவிக்கு கடைசி நேரத்தில் உதவி செய்யவில்லை. இந்த நிலை தான் இங்கு இருக்கிறது. தயாரிப்பாளர் இல்லை என்றால் சினிமா இல்லை. இயக்குநர்கள், நடிகர்கள் இல்லை. தமிழ் மக்கள் தான் என்னை வாழவைத்தார்கள். எனக்கு கமர்ஷியல் படங்கள் தான் பிடிக்கும். இந்தப் படத்தில் நல்ல கமர்ஷியல் அம்சங்கள் இருக்கின்றன. இந்தப்படம் ஜெயிக்க வாழ்த்துகள். நன்றி" என்றார்.