செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ். ராதாகிருஷ்ணன் சென்னை:கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை மூத்த அரசியல்வாதி கே.எஸ். ராதாகிருஷ்ணன் இன்று காலையில் சந்தித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஆளுநரை சந்தித்து சங்க இலக்கியங்கள் குறித்தும், பக்தி இலக்கியங்கள் குறித்தும், யாதும் யாவரும் கேளிர் என்பதற்கான அர்த்தம் என்ன என்பது குறித்தும் பேசினோம்.
ஈழத்தமிழர் விஷயம், தமிழ்நாடு அரசியலில் என்ன நடக்கிறது, என்ன நிலைப்பாடு என்பது குறித்து பேசினோம். ஈழத்தமிழர் பிரச்னை குறித்து இந்திய அரசு கவனிக்க வேண்டும். இந்தியாவின் பாதுகாப்பும் ஈழத்தமிழர் பிரச்னையும் ஒருங்கிணைந்தது. கச்சத்தீவு வரை சீனா வந்துவிட்டது. சீனாவின் ஆதிக்கம் இந்து மகா கடலில் உள்ளது.
மகேந்திர கிரி அணு திரவம், கூடங்குளம் அணுமின் நிலையம், ராமேஸ்வரம் தீவு, நாகப்பட்டினம் துறைமுகம், ஶ்ரீஹரி கோட்டா, விசாகப்பட்டினம் வரை ஆபத்தான பகுதியாக இருக்கிறது. இலங்கையில் பெரும்பான்மையான இடத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் சிக்கல் வந்தால் நமக்கு தான் ஆபத்து.
தமிழ் மொழியில் என்னென்ன செய்யலாம். செம்மொழி நிறுவனம், மத்திய அரசு நிறுவனம் அதை எப்படி விரிவாக்கலாம். அனைத்து தமிழ் நூல்களையும் பல மொழியில் மொழிபெயர்ப்பது குறித்து பேசினோம். தமிழ்நாடு ஆளுநர் தன்னை இன்று தான் அழைத்தார். அதனால், இன்று வந்து பார்த்தேன்.
ராதாகிருஷ்ணன் போனால் பிரபாகரன் குறித்து பேசாமல் இருப்பேனா? ஆனால், அதை வைத்து அரசியல் செய்ய மாட்டோம். பிரபாகரன் இருந்தபோது நாடாளுமன்றத்தேர்தலில் தமிழர்கள் தான் வெற்றி பெறுவார்கள். இந்த முறை ராஜபக்ச ஆட்கள் வந்துள்ளனர். ஆனால், அவர்களால் ஆட்சி நடத்த முடியாமல் பொதுமக்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
பிரபாகரன் இருந்தபோது நீதி, நிதி என அனைத்தும் தனியாக வைத்திருந்தார். பிரபாகரன் வந்தாலே சிங்கள ஆட்சியாளர்களுக்கு பயம், பிரபாகரன் இருக்கும்போது நல்ல ஆட்சி நடந்ததா இல்லையா? அரசியலமைப்பு சட்டப்படி உறுதிமொழி ஏற்ற ஆளுநரிடம் இது குறித்து எல்லாம் பேசக்கூடாது. பிரபாகரன் பற்றி எப்படி பேச முடியும்; தடை உள்ளது. தமிழ்நாட்டில் நதிநீர் பிரச்னை என்றால், முல்லைப் பெரியாறு, காவிரி, பாலாறு பற்றி தான் பேசுகிறார்கள். கேரளா உடன் 16 நதி நீர் பிரச்னை உள்ளது; அது குறித்துப் பேச வேண்டும்'' என்றார்.
பிரபாகரன் உயிருடன் இருப்பது குறித்த கேள்விக்கு, ''பழ நெடுமாறன் சொன்னால் நான் சொன்னது மாதிரி. அவரை சொல்லி நாங்கள் அரசியல் செய்யப்போவதில்லை. நான் இந்திரா காந்திக்கு வேண்டப்பட்டவன். இளைஞர் காங்கிரஸில் இருந்தேன், காமராஜரால் அரசியலுக்கு வந்தவன் நான், மதிமுகவுக்கு அவ்வளவு பணிகள் செய்தேன், எம்ஜிஆர் என்னை வக்கீல் சார் என்று அழைப்பார். எனக்கு தகுதி உள்ளது. பிரபாகரான் இருக்கிறார் என்று சொல்கிறோம். அரசியலில் பணம் கொடுத்தால் தேர்தலில் வெற்றிப்பெற முடியும் என்ற நிலை வந்தது முதல் தேர்தலில் நிற்காமல் ஒதுங்கி இருந்து வருகிறேன்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஓபிஎஸ்சை நீக்கியதற்கு காரணம் ‘இது’தான்.. ஜெயக்குமார் ஓப்பன் டாக்!