இதுதொடர்பாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு கே.எஸ் அழகிரி எழுதிய கடிதத்தில், "சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளூர் மற்றும் நடுத்தர குடும்பத்தினருக்கு மட்டும் வேலை வழங்கவில்லை. இந்தியா முழுவதுக்கும் சிறு வர்த்தகர்கள், சரக்குப் போக்குவரத்து மேற்கொள்பவர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களை உள்ளடக்கிய பெரிய அளவிலான விநியோகச் சங்கிலியைக் கொண்டுள்ளது.
பட்டாசு விற்பனையைத் தடை செய்தால், இவர்களது வாழ்க்கை நிலை பெரிதும் பாதிக்கப்படும். நமது கொண்டாட்டங்களை வண்ணமயமாக்க ஆண்டு முழுவதும் உழைக்கும் பட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையும் மோசமான சூழலுக்குத் தள்ளப்படும். இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு, அனைத்துப் பட்டாசுகள் விற்பனைக்கும் விதிக்கப்பட்ட ஒட்டுமொத்த தடைக்கு விலக்கு அளிக்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறேன். மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு சிவகாசியில் தயாரிக்கப்படும் பசுமைப் பட்டாசுகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.
பசுமைப் பட்டாசுகளால் உடல்நலத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதையும், சுற்றுச்சூழலுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்பதையும் நான் உங்களுக்கு அறுதியிட்டுக் கூறுகின்றேன்"