தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி.. "உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்" - கே.எஸ்.அழகிரி! - உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசிய அழகிரி

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு இயற்றிய சிறப்புச் சட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்

Etv Bharat
Etv Bharat

By

Published : May 18, 2023, 8:24 PM IST

சென்னை :ஜல்லிக்கட்டு மற்றும் கால்நடை சார்ந்த போட்டிகளான மஞ்சுவிரட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு, மாட்டு வண்டி பந்தயம் ஆகியவைகள் தமிழ்நாட்டில் பொங்கல் தினத்தை ஒட்டி கொண்டாடப்படுகின்றன. ஜல்லிக்கட்டு போன்ற பாரம்பரிய போட்டிகளில், கால்நடைகள் துன்புறுத்தப்படுவதாகவும், அப்போட்டிகளை நடத்த தடை கோரியும், உச்ச நீதிமன்றத்தில் பீட்டா உள்ளிட்ட பல்வேறு விலங்கின ஆர்வல அமைப்புகள் மறு ஆய்வு மனுக்களை தாக்கல் செய்தன.

இதுதொடர்பாக நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வழக்கைத் தொடர்ந்து விசாரித்து வந்ததது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இன்று (மே 18) இதுதொடர்பான விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தத் தடையில்லை என ஒருமனதாக தீர்ப்பளித்தனர். மேலும், ஜல்லிக்கட்டுப் போட்டியை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சிறப்புச் சட்டங்கள் அனைத்தும் செல்லும் என தீர்ப்பு வழங்கினர்.

இந்த தீர்ப்பை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ், ஓபிஎஸ், வைகோ, அன்புமணி ராமதாஸ், அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் வரவேற்றனர். இந்நிலையில், இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டியான ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் 2014ஆம் ஆண்டு தடை விதித்தது. அந்த தடையை நீக்குவதற்கு நடைபெற்ற சட்டப் போராட்டத்திற்கு இன்று உச்ச நீதிமன்றம் நீதி வழங்கியிருக்கிறது. தமிழர்களின் நூற்றாண்டு கால பாரம்பரிய பண்பாட்டு விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு தமிழ்நாடு அமைச்சரவை நிறைவேற்றிய சட்டத்தை ஏற்றுக் கொண்டு இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

இந்தத் தீர்ப்பின் மூலம், எதிர்காலத்தில் ஜல்லிக்கட்டு போட்டி சட்ட அனுமதியோடு தமிழர்களின் வீர விளையாட்டாக தொடர்ந்து நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருப்பதையும், இதற்கான சட்டப் போராட்டத்தை நடத்திய தமிழ்நாடு அரசையும் பாராட்டுகிறேன். உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சட்டப்பேரவை உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவருமான செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என்று ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வின் ஒருமித்த தீர்ப்பை வரவேற்கின்றேன்.

உச்ச நீதிமன்றம் தடை விதிக்க வேண்டுமென்று கடுமையாக முயற்சி செய்த பீட்டா நிறுவனத்தின் வாதத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு நடத்திய சட்டப்போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றியாக பார்க்கின்றேன். தமிழ்நாடு அரசின் சிறப்பான வாதம் நீதிபதிகளை கவர்ந்தது என்று சொல்லியுள்ளனர்.

மானமும், வீரமும் மறத்தமிழனின் அடையாளமாகும். தமிழ்நாட்டின் வரலாற்றில் ஜல்லிக்கட்டுக்கு என்று தனியிடம் உண்டு. அது நமது பண்பாட்டுடன் கலந்த ஒன்றாகும். இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை பெற்றுத் தந்த தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு முதலமைச்சருக்கு எங்களது பாராட்டுகள்" என குறிப்பிட்டு உள்ளார்.

இதையும் படிங்க:ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றம்.. மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கும் மதுரைவாசிகள்!

ABOUT THE AUTHOR

...view details