இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 2020 முதல் உயிரிழப்புகள், உடல் நல சீர்கேடுகள், பொருளாதார பேரழிவுகளை இந்தியா சந்தித்து வந்தது. குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை இழந்து, வருமானத்தை துறந்து, தங்களது ஊர்களுக்கு பயணம் செய்வதற்கு போக்குவரத்து வச்அதி இல்லாமல் கால்நடையாகவே நடந்து சென்று தங்களது ஊர்களுக்கு திரும்பி சென்றனர். இதில் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த அவலம் பிரதமர் மோடி ஆட்சியில்தான் நிகழ்ந்தது.
ஆனால், கடந்த 2020 ஏப்ரல் 18ல் கரோனாவின் எண்ணிக்கை 2013ஆக இருந்தது. ஆனால், கடந்த ஓராண்டில் மத்திய பாஜக அரசின் அலட்சியப் போக்கு காரணமாக ஏப்ரல் 6 2021ல் பாதிப்பின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 269ஆக உயர்ந்திருக்கிறது. ஒரே நாளில் 630 பேர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகள் வரிசையில் அமெரிக்க, பிரேசிலுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையில் இந்தியா இருப்பது மிகுந்த கவலையைத் தருகிறது.
அதேபோல், தமிழ்நாட்டில் கரோனா தொற்று ஒரே நாளில் 4 ஆயிரமாகவும், சென்னையில் 1500ஆகவும் உயர்ந்திருக்கிறது. இத்தகைய கரோனா பாதிப்புகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட உயர்வு காரணமாக மக்களிடையே மீண்டும் அச்சமும், பீதியும் ஏற்பட்டிருக்கிறது. இதனால் தங்களுடைய வாழ்வாதாரம் மீண்டும் படுபாதாளத்திற்கு தள்ளப்படுமோ என்கிற கவலையில் மக்கள் ஆழ்ந்துள்ளனர்.
இதனால் அவர்களுக்கு எதிர்காலம் குறித்து மிகுந்த கவலையும், கேள்வி குறியும் ஏற்பட்டுள்ளது. பொருளாதார பாதிப்புகளைவிட, கரோனா தொற்று காரணமாக தங்களது உயிருக்கு ஏதாவது ஒருவகையில் பாதிப்பு ஏற்பட்டுவிடுமொ என்ற பீதியில் மக்கள் உறைந்திருக்கின்றனர். இவர்களுக்கு நம்பிக்கையூட்டுவதற்கு மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் என்ன?