தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆளுநர் என்பவர் முதலமைச்சரின் ஆலோசனையின்படி செயல்பட வேண்டும் - கே.எஸ். அழகிரி

ஆளுநர் என்பவர் முதலமைச்சரின் ஆலோசனையின்படிதான் செயல்பட வேண்டுமே தவிர, பாஜகவின் முகவராகச் செயல்படக் கூடாது எனத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்

KS Alagiri
கே.எஸ். அழகிரி

By

Published : Feb 23, 2021, 11:40 AM IST

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதுச்சேரி மாநில முதலமைச்சராக வி. நாராயணசாமி தேர்வுசெய்யப்பட்ட அதே சமயத்தில்தான் துணைநிலை ஆளுநராக கிரண்பேடி அரசியல் உள்நோக்கத்தோடு நியமிக்கப்பட்டார்.

முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களுக்குத் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு செயல்படவிடாமல் தடுத்துக் கொண்டிருந்தவர்தான் கிரண்பேடி. துணைநிலை ஆளுநரின் ஜனநாயக விரோதப்போக்கை கண்டித்து ஒரு முதலமைச்சர், அமைச்சர்கள் அவரது மாளிகையின் நுழைவாயிலுக்கு வெளியே இரவு-பகல் என்று பாராமல் அங்கேயே உறங்கி தொடர் போராட்டம் நடத்த வேண்டிய அவலநிலை வேறு எந்த மாநிலத்திலும் நடந்திருக்க முடியாது.

அத்தகைய கொடூரமான துணைநிலை ஆளுநரின் நடவடிக்கைகளை எதிர்த்து பதவிக் காலம் முழுவதும் போராடியவர் முதலமைச்சர் வி. நாராயணசாமி.

கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 15 இடங்களிலும், திமுக 3 இடங்களிலும் வெற்றிபெற்று ஒரு சுயேச்சை உறுப்பினரின் ஆதரவோடு மொத்தம் 19 உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. அதேநேரத்தில் 18 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, அனைத்திலும் வைப்புத்தொகையை பறிகொடுக்கிற அவலநிலை இருந்ததை எவரும் மறந்திட இயலாது.

புதுச்சேரி மாநில மக்களால் நிராகரிக்கப்பட்ட பாஜகவை சார்ந்த மூவரை நியமன உறுப்பினர்களாக துணைநிலை ஆளுநர் நியமித்ததைவிட ஜனநாயக விரோத நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது. ஆளுநர் என்பவர் முதலமைச்சரின் ஆலோசனையின்படிதான் செயல்பட வேண்டுமே தவிர, பாஜகவின் முகவராகச் செயல்படக் கூடாது.

துணைநிலை ஆளுநரின் பல்வேறு தடைகளை மீறியும் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு பாஜக சதித் திட்டம் தீட்டியது. சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதற்கு 100 நாள்கள் மட்டுமே இருக்கிற நிலையில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிலர் விலை பேசப்பட்டு கட்சியிலிருந்து விலகுகிற நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.

மேலும், நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது பாஜகவின் நியமன உறுப்பினர்கள் மூன்று பேருக்கும் வாக்குரிமை வழங்கக் கூடாது என்ற காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை சபாநாயகர் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.

இந்நிலையில் அரசியல் பேராண்மையோடு முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவையிலிருந்து நேரடியாக வெளியேறி துணைநிலை ஆளுநரை சந்தித்து பதவி விலகல் கடிதத்தை வழங்கியிருக்கிறார். இதன்மூலம் காங்கிரஸ் கட்சியின் அரசியல் நேர்மையை புதுச்சேரி மக்கள் நிச்சயம் பாராட்டுவார்கள்.

கடந்த காலங்களில் கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மணிப்பூர், கோவா எனத் தொடர்ந்து பல மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை பாஜக கவிழ்த்ததைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஆனால், புதுச்சேரி போன்ற ஒரு சிறிய மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடப்பதைச் சகித்துக் கொள்ள முடியாத நிலையை வைத்து பாஜகவின் சர்வாதிகார அணுகுமுறையை மக்கள் நன்கு புரிந்துகொள்வார்கள்.

நாராயணசாமி தலைமையிலான ஆட்சியை முடக்குவதற்கு கிரண்பேடி பயன்பட்டார். அரசியல் ரீதியாக ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகளை மேற்கொள்வதற்கு கிரண்பேடி பயன்பட மாட்டார் என்ற உள்நோக்கத்தில் அதைச் செய்வதற்கு தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜனுக்கு துணைநிலை ஆளுநர் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்ப்பதில் பாஜக தற்காலிகமாக வெற்றிபெறலாம்.

ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கடந்த நான்கே முக்கால் வருடம் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டிருந்தாலும் அதையும் மீறி மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நிகழ்த்தியிருக்கிறது. தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு உள்ஒதுக்கீடு 7.5 விழுக்காடுதான். ஆனால், புதுச்சேரியில் 10 விழுக்காடாக பெற்றுத் தந்தவர் நாராயணசாமி. இலவச அரிசிக்கு கிரண்பேடி விதித்த தடையை மீறி நிறைவேற்றிய பெருமை இவருக்கு உண்டு.

மேலும், 15ஆவது நிதிக்குழு பரிந்துரைப்படி புதுச்சேரி அரசுக்கு 41 விழுக்காடு நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஆனால், 21 விழுக்காடு நிதி ஒதுக்கீடு மட்டுமே வழங்கி காங்கிரஸ் ஆட்சிக்கு கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்துவதில் பாஜக காட்டிய முனைப்பை புதுச்சேரி மக்கள் நன்கு அறிவார்கள்.

புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி பதவியிலிருந்து விலகினாலும், மக்கள் மனத்திலிருந்து எந்தச் சக்தியாலும் விலக்க முடியாது. சமீபத்தில் நடந்த 2019 மக்களவைத் தேர்தலில்கூட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வைத்தியலிங்கம் ஏழு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதையும், நெல்லிதோப்பு சட்டப்பேரவைத் தொகுதியில் நாராயணசாமி 70 விழுக்காடு வாக்குகள் பெற்றதையும், தட்டாஞ்சாவடி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றிபெற்றதையும் பார்க்கும்போது காங்கிரஸ் -திமுக கூட்டணியின் மக்கள் செல்வாக்கை அறிந்துகொள்ள முடியும்.

எனவே, புதுச்சேரி மக்களால் நிராகரிக்கப்பட்ட பாஜகவின் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் மூலமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை சாம, பேத, தான, தண்டங்களைக் கையாண்டு காங்கிரஸ் ஆட்சி அகற்றப்பட்டிருக்கிறது.

இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கைக்கு வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் உரிய பாடத்தைப் புகட்டுகிற வகையில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அங்கே அமையப் போவது உறுதி என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மௌனம் கலைப்பாரா சசிகலா? அடுத்த கட்ட நகர்வு என்ன...

ABOUT THE AUTHOR

...view details