வரவிருக்கும் நாடாளுமன்றத்தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் திமுக, காங்கிரஸூம் கை கோர்த்துள்ளன. மொத்தம் 40 தொகுதிகளில் 10 தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கியுள்ள நிலையில், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்த பேச்சுவார்த்தையை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, திமுக தலைவர் ஸ்டாலினுடன் நடத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அழகிரி பேசுகையில்,
திமுக உடன் தொகுதி பங்கீடு இனிமையான முறையில் நிறைவடைந்துள்ளது. புதுவை சேர்த்து எங்களுக்கு பத்து தொகுதிகள் என கையெழுத்திட்டுள்ளோம். எந்த தொகுதிகள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் நாளை அறிவிப்பார். காங்கிரஸ் சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர். புதுமுக வேட்பாளர்களுக்கு தேர்தலில் வாய்ப்பு கொடுக்கப்படும்.
உண்மையே வெல்லும் எனக்கூறுவது எதிர்மறையான கருத்து இல்லை. ராகுல் காந்தி எதிர்மறையான கருத்து கூறும் தலைவர் இல்லை. தலைவர் ராகுல் காந்தி இந்திய மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளவும், இளைஞர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளவும் மாணவர்களை சந்தித்து வருகிறார்.
குறிப்பாக நேற்று ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் நடந்த கலைந்துரையாடல்ஒரு அற்புதமான நிகழ்ச்சி. அந்த நிகழ்வு என்பது மணிரத்னம் படக்காட்சி போல் இருந்தது. அந்த அளவு சிறப்பாக பேசினார். மொழிபெயர்ப்பு என்பது கருத்தை தான் கூறவேண்டும் தவிர வார்த்தைகள் அல்ல. என்னை பொறுத்த வரை கே.வி.தங்கபாலு ராகுல் காந்தி கூற வேண்டிய கருத்தை சிறப்பாக கூறினார்.
ஜி.கே.வாசன் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து அரசியல் செய்வதை விட தவறான அரசியல் புரிதல் இருக்கவே முடியாது. தமிழ் மாநில காங்கிரஸ் எந்த கொள்கைக்கு உருவாக்கப்பட்டதோ அதற்கு எதிர் மறையாக செயல்பட்டு வருகிறது. ஜி.கே.வாசன் எடுத்துள்ள இந்த முடிவு வருத்தப்பட வேண்டிய முடிவு எனத் தெரிவித்தார்.