சென்னை:நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் பல்வேறு மாநிலங்கள் அதன் பேரவைத் தேர்தல்களை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் சத்தீஸ்கர் அதன் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவையும் மற்றும் மத்தியபிரதேசத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் தேர்தல் களத்தில் சமீபத்தில் சமூக ஊடகங்களில் இந்தியா பொருளாதார வளர்ச்சியில் இலக்கை முழுமையாக அடைந்து விட்டதாக செய்திகள் பரவின. இதற்கு மறுப்பு தெரிவித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "சமூக ஊடகத்தில் தவறான புள்ளி விவரத்தின் அடிப்படையில் 4 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி அடைந்து விட்டதாக செய்திகள் பரப்பப்பட்டது. இதன்மூலம் ஐந்து மாநில தேர்தல்களில் வாக்காளர்களை ஏமாற்றி விடலாம் என்று பா.ஜ.க. பகல் கனவு காண்கிறது. 5 ட்ரில்லியன் டாலர் உள்நாட்டு மொத்த உற்பத்தி இலக்கை எட்டினாலும், பட்டினி கிடப்பார்கள் என்றுதான் அர்த்தம். இந்த 5 ஆண்டு இலக்கால் யார் பயனடைவார்கள்?.
மேலும், 2028 ஆம் ஆண்டு வரை இலவச ரேஷன் அரிசியை பெறப்போகும் இந்திய பொதுமக்கள் குறிப்பாக, 80 கோடி மக்களுக்கு 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை குறுகிய காலத்துக்குள் அடைய எவ்வளவு வேகமாக ஓட வேண்டும்?. மூலதனம், உற்பத்தி மற்றும் தொழிலாளர்களை மையமாகக் கொண்டுதான் இந்திய பொருளாதார வளர்ச்சி இருக்கிறது. ஆனால் 5 இல் 1 பங்கு இந்தியர்களுக்கு 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.
அடுத்த 2029 மக்களவை தேர்தலுக்கு முன்பு 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தால் பணக்காரர்கள் வலுவான நிலையை அடைவார்கள் என்பது மோடி அரசுக்கு நன்றாகவே தெரியும். மோடி கொடுத்துள்ள மற்றொரு உத்தரவாதம், அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் 3 வது பெரும் பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என்பது தான். முதலாவதாக, தனிநபர் வருமானம் ரூபாய் 1லட்சத்து 99ஆயிரத்து 200 (2400 டாலர்) என்ற வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டில் 194 நாடுகளில், இந்தியா 149 வது இடத்தில் தான் உள்ளது.
தனிநபர் வருமானம் உயர்ந்தால் தான் மக்களின் வாழ்க்கை நிலை சிறப்பாக இருக்கும். உலக அளவிலான உள்நாட்டு மொத்த உற்பத்தியில் ஜப்பானை விட சீனா அதிகமாக இருந்தபோதும், சீனாவின் தனிநபர் வருமானம் ரூபாய் 10லட்சத்து 79ஆயிரத்தைக் (13,000 டாலர்) காட்டிலும், ஜப்பானில் தனிநபர் வருமானம் ரூபாய் 28 லட்சத்து 22ஆயிரம் (34,000 டாலர்) என்கின்ற அளவில் சிறப்பிடத்தில் இருப்பது கவனிக்கத்தக்கது. இவ்வாறு இந்தியாவின் தனிநபர் வருமான வளர்ச்சி 5 டிரில்லியன் டாலரை நோக்கியதாக இருக்கிறதா?.
இதுவரை இதுகுறித்து அரசின் அதிகாரப்பூர்வ மதிப்பீடு ஏதும் வெளியாகவில்லை. இந்நிலையில், மோடியின் கனவு கேள்விக்குறியாகவே இருக்க முடியும். ஆனால், அதற்குள்ளாக சமூக ஊடகத்தில் தவறான புள்ளி விவரத்தின் அடிப்படையில் 4 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி அடைந்து விட்டதாக செய்திகள் பரப்பப்பட்டது. இதன்மூலம் ஐந்து மாநில தேர்தல்களில் வாக்காளர்களை ஏமாற்றி விடலாம் என்று பா.ஜ.க. பகல் கனவு காண்கிறது. விநியோகம் அல்லது சமத்துவமற்ற குறியீட்டின் அடிப்படையில் மட்டுமே 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய முடியும்.
இந்த குறியீடு 0-100 என உலகப் பொருளாதாரத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி சீனா மற்றும் ஜப்பானின் மதிப்பு 50 க்கும் மேல் உள்ளது. ஆனால், 21.9% மதிப்பு உள்ள இந்தியாவை விடப் பல மடங்கு அதிகமாக இந்த நாடுகளின் பொருளாதார பங்களிப்பு உள்ளது. 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தால் ஏழைகள், பணக்காரர்கள் என்று இந்தியா இரண்டாகப் பிளவுபடுமா?. மோடி ஆட்சியில் பெரும்பாலான மக்கள் இன்னும் வளர்ச்சிப் பாதையில் இணைக்கப்படாமலே இருக்கின்றனர்.
வளர்ச்சியில் சமநிலைத்தன்மை இல்லை. மோடி ஆட்சி என்பது யாருக்காக நடைபெறுகிறது என்பதை மேற்கண்ட புள்ளி விவரங்கள் தெளிவுபடுத்துகின்றன. அதேநேரத்தில், வளர்ச்சியின் கதாநாயகனாக மோடி தன்னை முன்னிலைப்படுத்துவதை நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்" என்று கே.எஸ். அழகிரி தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க:“பக்தி இல்லை, பகல் வேஷம் போடுகின்றனர்” - நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!