இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியன் ஓவர்சீஸ் வங்கியையும், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவையும் தனியாருக்கு விற்கும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சந்தை முதலீடு ரூ. 31 ஆயிரத்து 641 கோடி ஆகும்.
இந்த வங்கி தமிழ்நாட்டின் பாரம்பரிய வங்கியாகும். கடந்த 1939 பிப்ரவரி 10ஆம் தேதி எம்.சி.டி.எம். சிதம்பரம் செட்டியாரால் தொடங்கப்பட்டு, 1969-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் நாட்டுடைமையாக்கப்பட்டது. தற்போது தமிழ்நாட்டின் முன்னோடி வங்கியாகத் திகழும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு, தமிழ்நாட்டின் பெரும் நகரங்களில் தொடங்கி, குக்கிராமங்கள் வரை 1,500 கிளைகள் உள்ளன.
பிற கிளைகளுக்குப் பணம் செலுத்தும் போதும், புத்தகம் வரவு வைத்தல் போன்ற சேவைகளுக்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கட்டணம் வசூலிப்பதில்லை. தமிழ்நாட்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர், இந்தியாவின் எந்த வங்கிக் கிளையிலும் சேவைக் கட்டணம் இன்றி பணம் எடுக்கலாம். மற்ற வங்கிகளில் இந்த சேவைக்குத் தனியாகக் கட்டணம் வசூலிக்கிறார்கள். கிராமப்புற மக்களுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆற்றி வரும் சேவை மகத்தானது