சென்னை:அரசு மருத்துவரை மிரட்டி ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்றதாகக் கிடைத்த புகாரின் அடிப்படையில் மதுரையைச் சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அங்கித் திவாரியின் வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள் மதுரை தபால் தந்தி நகர்ப் பகுதியில் உள்ள அமலாக்கத்துறை துணை மண்டல அலுவலகத்திலும் சோதனைக்காக சென்றனர்.
ஆனால், இந்த சோதனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் மறுத்த போது அவர்களை காவல்துறையினர் தள்ளிவிட்டு அலுவலகத்திற்குள் சென்று சோதனை நடத்த முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும், கோயம்புத்தூரிலிருந்து 10க்கும் மேற்பட்ட CRPF படையினர் அமலாக்கத்துறை அலுவலகத்திற்குப் பாதுகாப்பிற்காகச் செல்ல முயன்றனர். ஆனால், காவல் துறையினர் அவர்களை அனுமதிக்கவில்லை.
அப்போது, அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து கேள்விக்குப் பதிலளித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, "தமிழகக் காவல்துறை அவர்களுக்குக் கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் ஆதாரங்களோடு அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனைக்குச் சென்றுள்ளார்கள். இவர்களைப் பார்த்தவுடன் லஞ்சம் பெற்ற அதிகாரி ஓடிச் சென்றுள்ளார். அவர் குற்றமற்றவர் என்றால் இவர்களை எதிர்கொண்டிருக்கலாம். அவர்கள் குற்றம் செய்திருக்கிற காலத்தினால் ஓடி ஒளிகிறார். மாநிலத்தினுடைய காவல்துறை சோதனைக்கு அனுமதித்து இதனை அமலாக்கத்துறை எதிர்கொள்ள வேண்டும்.
இதனை எதிர்கொள்ளாமல் மத்திய காவல் படையை அழைத்தது தான் தவறு. மத்திய காவல் படை அங்கே வருகிறது என்றால் தமிழகக் காவல்துறையை மிரட்டிப் பார்க்கிறார்களா? இரண்டு அரசுக்கும் சம மரியாதை கொடுக்க வேண்டும். மத்திய அரசு உயர்ந்தது என்றோ மாநில அரசு தாழ்ந்தது என்றோ கிடையாது. இரண்டுமே சம அதிகாரம் பெற்றவர்கள் தான்.
உங்கள் மீது குற்றச்சாட்டு இருக்கிறது, அதற்கு ஆதாரமும் இருக்கிறது, ஒரு அதிகாரிக்கு எதிராகத் தான் இது செயல்படுகிறதே தவிர அமைப்பிற்கு எதிராக அல்ல. கைது செய்யப்பட்டுள்ள அதிகாரி அந்த தவறு செய்திருக்கிறார். அவர் கையில் பணம் இருக்கிறது, ஏற்கனவே ரூ20 லட்சத்தைப் பெற்றிருக்கிறார். மீண்டும் ரூ. 20 லட்சம் கேட்டு தொந்தரவு செய்கிறார் என்ற தகவலின் அடிப்படையில் தான் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
எனவே, அமலாக்கத்துறை தன்னுடைய கதவுகளைத் திறந்து வைக்க வேண்டும். ஒரு மாநிலத்திற்கு உட்பட்டு நாங்கள் விசாரணை செய்கிறோம் என்கிற போது அந்த விசாரணைக்கு எப்படி மாநிலம் கட்டுப்படுகிறதோ, அதேபோல் ஒரு குறிப்பிட்ட அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் போது அந்த அலுவலகம் அதற்கு உடன்பட வேண்டும்.