சென்னை:தமிழகம் வந்திருந்த சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய இருவரையும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோதிமணி, விஜய் வசந்த், திமுக சார்பாக கனிமொழி எம்பி மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் என ஏராளமானோர் சென்னை விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், “நேற்று நடந்த மகளிர் உரிமை மாநாடு ஏறக்குறைய இந்தியா கூட்டணி மகளிர் மாநாடுதான். இந்தியா முழுவதும் இருந்து மகளிர் தலைவர்கள் வந்திருந்தார்கள்.
ராஜீவ் காந்தி கொடுத்த 33 சதவீத இடஒதுக்கீடுதான் பெண்களுக்கு சரியாகச் சென்றது. மோடி சொன்ன இடஒதுக்கீடு 2032இல் கிடைக்கும் என்கிறார்கள். 2032இல் இடஒதுக்கீடு கிடைப்பதற்கு இப்போது தீர்மானம் போட வேண்டிய அவசியம் இல்லை. பிரதமர் செய்வது ஒரு ஏமாற்று வேலை என்பதை மகளிர் உரிமை மாநாடு மூலம் தெரிவித்துள்ளோம்.
இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் சென்னையிலும் கண்டிப்பாக நடைபெறும். முதலமைச்சர், அதற்கான ஏற்பாடுகளை செய்வார். நேற்று நடந்த மகளிர் மாநாட்டில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள, தமிழ்நாட்டிற்கு எப்போது வேண்டுமானலும் வருவேன் என்று பிரியங்கா காந்தி கூறினார். விரையில் அவரை அழைக்க இருக்கிறோம்.