கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையைச் சேர்ந்த மருத்துவர் வசந்தகுமார் என்பவர், கரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும், அதுகுறித்த ஆராய்ச்சி கட்டுரைகளுடனும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு மனு அனுப்பியிருந்தார். இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாததை அடுத்து, தனது மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கும்படி, மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கும் உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவர் வசந்தகுமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் கண்டுபிடித்துள்ள பீட்டா அட்ரெனர்ஜிக் பிளாக்கர்ஸ் மருந்து, சார்ஸ் மற்றும் கரோனா வைரஸ் உடல் செல்களில் நுழையவிடாமல் தடுக்கும் என வாதிட்டார்.