சென்னை: தலைமைச் செயலக வளாகத்தில் அதிமுக துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி. முனுசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நாட்டில் நடக்கும் தவறான செயல்பாடுகள், பொதுமக்கள் பாதிக்கப்படும் நிகழ்வுகள் வரும்போது எதிர்க்கட்சி என்ற முறையில் சட்டப்பேரவையில் எடுத்துரைப்பார்கள்.
அந்த அடிப்படையில் தான் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் விழுப்புரம் மாவட்டத்தில் இப்ராஹிம் ராஜா என்பவர் கொலை செய்யப்பட்டு இருந்ததைக் கவன ஈர்ப்பு தீர்மானமாகக் கொண்டு வந்தார். கொலை செய்யப்பட்ட இரண்டு பேரும் கஞ்சா போதையில் முதலமைச்சர் ஸ்டாலின் பனியினை போட்டு தகராறு செய்து கொலை சம்பவத்தில் ஈடுபடுகின்றனர். எனவே அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் தீர்மானம் கொண்டு வந்தார்.
அதனை விமர்சனம் செய்யும் வகையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் வேறு விதமாக திசை திருப்புகிறார். ஆட்சியாளர்களின் கவனத்தைச் சுட்டிக்காட்டுவது தான் எதிர்க்கட்சியின் வேலை. காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு அவர்கள் கஞ்சா ஆபரேஷன் 2.0 என்ற தனி ஆபரேஷனை தொடங்கி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அந்த நடவடிக்கையில் 2,138 வழக்குப் பதிவு செய்யப்பட்டு 148 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர், மற்றவர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை என்ற சந்தேகம் வருகிறது. கைது செய்யப்படாதவர்கள் சமூக விரோதிகளா அல்லது திமுகவைச் சேர்ந்தவர்களா என்ற கேள்வியை எழுப்பினால் ஆட்சியாளர்களுக்குக் கோபம் வருகிறது.