கோயம்பேடு சந்தையில் இருந்து கரோனா பரவியது என கடந்த மே மாதத்தில் பரவிய செய்திகள் அனைத்தும் தவறானது என கோயம்பேடு அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள், கோயம்பேடு சந்தையின் தற்போதைய கள நிலவரத்தைப் பகிர்ந்து கொண்டனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், அனைத்து கடைகளும் மறுபடியும் திறக்கப்பட்டுவிட்டன என அனைவரும் தற்போது எண்ணிக்கொண்டிருக்கின்றனர். மலர் மற்றும் கனி அங்காடிகள் இன்னும் திறக்கப்படவில்லை. மேலும், மொத்த வியாபாரிகளுக்கு மட்டுமே வியாபாரம் செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது, அவர்களிடமிருந்து வாங்கி விற்கும் சிறு மொத்த வியாபாரிகளுக்கு அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை.
கோயம்பேடு சந்தையில் சொந்த கடைகளை வைத்துக்கொண்டு தாங்கள் அகதிகள் போல அங்குமிங்கும் அலைந்து கொண்டு இருப்பதாக வேதனைத் தெரிவித்தனர். கரோனா பரவலில் அரசாங்கம் முதலில் சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் திருமழிசை, மாதாவரம் போன்ற இடங்களுக்கு சென்று இருக்க மாட்டோம்.
திருமழிசை, மாதாவரம் ஆகிய இடங்களில் பரவாத கரோனா கோயம்பேட்டில் மட்டும் பரவுகிறதா? எனக் கேள்வி எழுப்பினர். கோயம்பேடு சந்தையை மூடும்போது வியாபாரிகளுக்கு கரோனா இல்லை. சாலையோரத்தில் இருந்த ஒருவருக்கு மட்டுமே கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.