கரோனா தொற்று தீவிரமாகப் பரவியதைத் தொடர்ந்து, கோயம்பேடு காய்கறி, கனி, மலர் விற்பனை மொத்த அங்காடி, கடந்த மே மாதம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கோயம்பேடு மொத்த விற்பனை சந்தை தற்காலிகமாக திருமழிசைக்கு மாற்றப்பட்டது. சென்னை மாநகரில் கரோனா பாதிப்பு கட்டுக்குள் வரத்தொடங்கிய பின்னர், உணவு தானிய விற்பனை அங்காடி கடந்த செப்டம்பர் 18ஆம் தேதியில் இருந்தும், மொத்த காய்கறி விற்பனை கடைகள் செப்டம்பர் 28ஆம் தேதியில் இருந்தும், கனி விற்பனை சந்தை நவம்பர் 2ஆம் தேதி முதல் மீண்டும் இயங்கத் தொடங்கின.
கோயம்பேடு வணிக வளாகத்தில், 1,500-க்கும் மேற்பட்ட சிறு மொத்த காய்கறி கடைகள் மட்டும் திறக்கப்படாமல் இருந்தது. தங்களுடைய வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, சிறு மொத்த வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து கோயம்பேட்டில் முதற்கட்டமாக 800 சிறு மொத்த காய்கறி கடைகள் நவம்பர் 15ஆம் தேதி திறக்கப்பட்டது.