சென்னை: மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணியில், கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம், முகப்பேர் வழியாக ஆவடி வரையிலும், அதேப்போல், வழித்தடம் 3-ல் சிறுசேரியில் இருந்து கேளம்பாக்கம் வழியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை விரிவான சாத்தியக்கூறு அறிக்கைகளை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் நேற்று (செப் 20) தமிழக அரசிடம் வழங்கியது.
மெட்ரோ ரயில் திட்டம் சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தில் தற்போது பச்சை மற்றும் நீலம் என இரண்டு வழித்தடங்கள் வாயிலாக 54 கிலொ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், மெட்ரோ ரயில் நிர்வாகமும் பயணிகளுக்குப் பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது.
இதேப்போல், மக்களின் வசதிக்காக சென்னையின் புறநகர் பகுதிகளுக்கு தற்போது மெட்ரோ ரயில் இயக்குவதற்கான சாத்திய கூறுகளை தொடர்ந்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆராய்ந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ஆவடி, மற்றும் கிளாம்பாக்கம் வரையில் மெட்ரோ ரயில் இயக்குவதற்கான சாத்தியக் கூறுகள் சாதகமாக இருந்த நிலையில், ஏறத்தாழ 11 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்ட அறிக்கையை மெட்ரோ ரயில் நிறுவனம் தமிழக அரசிடம் சமர்பித்து உள்ளது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட விரிவாக்கப் பணியில், ஆவடி-கோயம்பேடு, சிறுசேரி - கிளாம்பாக்கம் உள்ளிட்ட இரண்டு வழித்தடங்களுக்கான திட்ட அறிக்கையை, தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனாவிடம் , சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனருமான மு.அ.சித்திக், சமர்ப்பித்தார்.
கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம், முகப்பேர் வழியாக ஆவடி வரை 16 புள்ளி 7 கிலோ மீட்டர் நீளத்திற்கு தோராயமாக 15 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் சுமார் 6 ஆயிரத்து 376 கோடியே 18 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் திட்ட அறிக்கை உருவாக்கபட்டுள்ளது சென்னை மெட்ரோ ரயில் திட்ட கட்டம், 2 வழித்தடம் 3-ல் சிறுசேரி முதல் கேளம்பாக்கம் வழியாக கிளாம்பாக்கம் வரை 23 புள்ளி 5 கிலோ மீட்டர் நீளத்திற்கு தோராயமாக 12 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் 5 ஆயிரத்து 458 கோடியே 6 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது" என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:செப்.24 முதல் சென்னை - நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கம்!