கோவை, நீலகிரி மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்குப் பருவக் காற்றின் காரணமாக நீலகிரி மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிக மழையும், கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழையும், தேனி மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் கன மழையும், திருவள்ளூர்,வேலூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு, வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலையைப் பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியசும், குறைந்த பட்சம் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.