சென்னை:கொரட்டூர் சிவலிங்கபுரம் வீரராகவன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் திலீபன் (26). இவரது தந்தை சுவாமிதாஸ். இவர் சென்னை அசோக் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில், பணியாற்றி வந்தார். கடந்த 2017ஆம் ஆண்டில், சுவாமிதாஸ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து கொரட்டூர் போலீஸ், தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், சுவாமிதாஸ் உடன் இருந்த தவறான நட்பு காரணமாக, சுவாமிதாஸ் வீட்டின் பணிபெண்ணாக இருந்த லட்சுமி (32), தன் ஆண் நண்பர் முகமது இர்பான் (35) என்பவருடன் சேர்ந்து, சுவாமிதாஸை கொலை செய்தது தெரிய வந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த கொரட்டூர் போலீசார், திலீபன் வீட்டில் வேலை பார்த்து வந்த லட்சுமி (32) மற்றும் அவரது கணவர் முகமது இர்பானை (32) பிடித்து விசாரித்தனர். அப்போது இறந்த சுவாமிதாஸ் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், அதனால் தானும் எனது கணவரும் இணைந்து அவரை அடித்துக் கொன்று, அவரது உடலை கிணற்றில் வீசியதாக, அவர்கள் தெரிவித்து இருந்தனர்.
இதனையடுத்து, கொரட்டூர் போலீசார், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 2 மாதங்களுக்குப் பிறகு, இவர்கள் ஜாமீனில் வெளிவந்தனர். இந்த வழக்கின் விசாரணை, பூந்தமல்லி நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. ஆனால், ஜாமீனில் வெளிவந்த அவர்கள், விசாரணைக்கு ஆஜர் ஆகாமல், தொடர்ந்து டிமிக்கி கொடுத்து வந்தனர். அவர்கள் கடந்த 5 வருடங்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தொடர்ந்து, தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கொரட்டூர் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்திக்கு, லட்சுமியின் புதிய செல்போன் எண் கிடைத்தது. அதனை அடுத்து, அந்த செல்போன் இருக்கும் இடம் குறித்து ஆராய்ப்பட்டது. அந்த எண், தற்போது, கோவை மாவட்டம் சீரநாயக்கன்பாளையம் பகுதியில், செயல்பாட்டில் இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து, அந்த இடத்திற்கு விரைந்த கொரட்டூர் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார், கோயம்புத்தூர், சீரநாயக்கன்பாளையம், ஜீவானந்தம் தெருவில் உள்ள ஒரு வீட்டில் வைத்து லட்சுமியை கைது செய்தனர். பின்னர், லட்சுமியை, போலீசார் கொரட்டூர் காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் லட்சுமி கொடுத்த தகவலின் அடிப்படையில் முக்கிய குற்றவாளியான அவரது கணவர் முகமது இர்பான் டெல்லியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து டெல்லி விரைந்த போலீசார் அங்குவைத்து முகமது இர்பானை கைது செய்து கொரட்டூர் காவல் நிலையம் அழைத்து வந்தனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.