சென்னை: சென்னையில் பெய்து வரும் தொடர் மழையால் ஏரிகள் அனைத்தும் நிரம்பியது. இந்நிலையில், கூவம் ஆற்றுக்கு அருகே உள்ள ஏரிகளில் நிரம்பிய மழைநீர், கூவம் ஆற்றில் திறந்து விடப்பட்டதால் கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பெய்து வந்தது. இதனால் பல பகுதிகளில் சாலைகளும், குடியிருப்புப் பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கின. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வாலாஜா சாலை, மவுண்ட் ரோடு, அண்ணா சாலை, சேப்பாக்கம், ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை மற்றும் பிற தாழ்வான பகுதிகள் உள்பட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மிக்ஜாம் புயல் ஆந்திர மாநிலத்தின் தெற்கு கடற்கரையில் நெல்லூர் மற்றும் மச்சிலிப்பட்டினம் இடையே பாபட்லாவுக்கு அருகில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
தற்போது பாபட்லாவில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும், புயலின் தாக்கத்தால் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மச்சிலிப்பட்டினத்தின் பல பகுதிகளில் மழை மற்றும் நீர் தேக்கம் காரணமாக வயல்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இதையும் படிங்க: சென்னையில் மீண்டும் மின் விநியோகம்.. அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!