தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடுங்கையூர் விசாரணை கைதி மரண வழக்கு: சிபிசிஐடி விசாரணை அலுவலர் நியமனம்!

சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி உயிரிழந்த வழக்கு தொடர்பாக, சிபிசிஐடி விசாரணை அலுவலராக டிஎஸ்பி சசிதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

By

Published : Jun 17, 2022, 1:52 PM IST

கொடுங்கையூர் விசாரணை கைதி மரண வழக்கு: சிபிசிஐடி விசாரணை அலுவலர் நியமனம்!
கொடுங்கையூர் விசாரணை கைதி மரண வழக்கு: சிபிசிஐடி விசாரணை அலுவலர் நியமனம்!

திருவள்ளூர் மாவட்டம் அலமாதி பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவர் கடந்த ஜூன் 12 ஆம் தேதி கொடுங்கையூர் காவல்துறையினரால் குற்ற வழக்கு ஒன்றின் விசாரணைக்காக கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது சந்தேகமான முறையில் ராஜசேகர் உயிரிழந்ததை தொடர்ந்து, மேஜிஸ்ட்ரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இதற்கிடையில் கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர், பொன்ராஜ் உள்ளிட்ட 5 காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ராஜசேகரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், காவல்துறையினரே ராஜசேகரை அடித்துக் கொன்று விட்டதாகவும், பிரேத பரிசோதனை செய்யும்போது எடுக்கப்படும் வீடியோ பதிவுகளை அளித்தால் மட்டுமே உடலை பெற்றுக் கொள்வோம் என ராஜசேகரின் குடும்பத்தார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்த சந்தேக மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை முதற்கட்ட அறிக்கை வெளியானது. அதில், “உயிரிழந்த விசாரணைக் கைதி ராஜசேகரின் உடலில் 4 காயங்கள் இருந்தது.

ஆனால், இவை அனைத்தும் ராஜசேகர் கைது செய்யப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக ஏற்பட்ட காயங்கள்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேநேரம், “பிரேதப் பரிசோதனை முதற்கட்ட அறிக்கையின் அடிப்படையில் ராஜசேகரின் உடலில் ஏற்பட்ட காயங்கள் காவல் துறையினர் தாக்கியதால் ஏற்பட்டவை அல்ல. ராஜசேகர் மரணத்திற்கும் காவல் துறையினருக்கு எந்த தொடர்பும் இல்லை.

விசாரணை கைதி ராஜசேகர் உயிரிழந்ததற்கான சரியான காரணம் விஸ்ரா அறிக்கை வெளியான பின்பே தெரியவரும்” என சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் விசாரணைக் கைதி ராஜசேகர் மரணம் வழக்கு தொடர்பாக சிபிசிஐடி டி.எஸ்.பி சசிதரன் விசாரணை அலுவலராக நியமிக்கப்பட்டு விசாரணையைத் தொடங்கி உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜசேகரின் குடும்பத்தார் கோரிக்கையை ஏற்று பிரேத பரிசோதனை செய்யும் போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகள் அவர்களுக்கு அளிக்கப்பட்ட நிலையில், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இருந்து ராஜசேகரின் உடலை பெற்றுக்கொள்ள அவரது குடும்பத்தினர் ஒப்புக் கொண்டனர்.

இதையும் படிங்க:தந்தையின் விநோத பூஜையில் 4 வயது சிறுமி உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details