சென்னை: இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்து வெளிநடப்புச் செய்தன. இதையடுத்து செய்தியாளரிடம் எதிரக்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கொடநாடு கொலை வழக்கில் தன்னையும் சேர்க்க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சதி செய்வதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த நிலையில் கொடநாடு விவகாரம் குறித்த விவாதத்தின்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், "எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிற அடிப்படையிலேயே பேசி, இங்கே ஒரு பிரச்சினையைக் கிளப்பியிருக்கிறார். (குறுக்கீடுகள்) அதற்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது (குறுக்கீடுகள்).
விசாரணையில் அரசியல் நோக்கமல்ல
எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதை நிரூபித்துவிட்டு, இங்கேயிருந்து வெளிநடப்புச் செய்திருக்கிறார்கள். கொடநாடு கொலை, கொள்ளை விசாரணையைப் பொறுத்தமட்டிலே, தேர்தல் காலத்திலே கொடுத்திருந்த வாக்குறுதியைத்தான் இப்போது இந்த அரசு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறதே தவிர, வேறல்ல.
நள்ளிரவிலே நடைபெற்ற அந்தக் கொள்ளைச் சம்பவத்திலே அடுத்தடுத்து நடைபெற்றிருக்கக்கூடிய மரணங்கள், விபத்து மரணங்கள் போன்றவை அப்போதே மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனால்தான் அந்தக் கொள்ளை, கொலை வழக்குகள் விசாரிக்கப்பட்டு, உண்மைக் குற்றவாளிகள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்படுவார்கள் என்று ஏற்கெனவே தேர்தல் நேரத்திலேயே நாங்கள் வாக்குறுதி கொடுத்திருக்கிறோம்.