சென்னை: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் சென்னை குடிநீர் வாரியம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்த சிறப்பு ஆய்வுக் கூட்டம் சிந்தாதிரிப்பேட்டையிலுள்ள சென்னை குடிநீர் வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று (செப்.07) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள், நீர்நிலைகளை தூர்வாரும் பணிகள் மற்றும் நீர் நிலைகளில் மேம்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, மாநகராட்சி ஆணையாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை குடிநீர் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் இரா.கிர்லோஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர், "பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை மற்றும் வீராணம் ஆகிய ஏரிகளிலிருந்தும், மீஞ்சூர், நெம்மேலியில் செயல்பட்டு வரும் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மூலம் நாளொன்றுக்கு 1000 மில்லியன் லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் 85 லட்சம் பொதுமக்கள் பயன் பெற்று வருகின்றனர். பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சீரான முறையில் பொதுமக்களுக்கு தினசரி குடிநீர் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.