சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் சந்தித்துப் பேசினார். அப்போது திமுக பொருளாளர் துரைமுருகன், எம்.எல்.ஏ எ.வ.வேலு, துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து பேசினேன். எப்போது தேர்தல் வந்தாலும் நாங்கள் சந்திப்பதற்கு தயாராக இருக்கின்றோம். ஆனால் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் எந்தவிதமான நடைமுறையையும் பின்பற்றாமல் தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
இத்தனை நாட்களாக என்ன வழக்கினால் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருந்ததோ, அந்த வழக்கில் கேட்கப்பட்ட ஏதும் இதுவரை தேர்தல் ஆணையம் வரையறை செய்யவில்லை. உள்ளாட்சித் தேர்தலை பிரித்து நடத்தியதாக வரலாறே கிடையாது. ஊரகப் பகுதிகளுக்கு ஒரு தேதியிலும், பேரூராட்சி, நகர, மாநகராட்சி பகுதிகளுக்கு இன்னொரு தேதியிலும் நடத்தினால், இந்தத் தேர்தலின் தாக்கம் அடுத்தத் தேர்தலிலும் இருக்கும்.