கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மதுபானக் கடை, அலுவலகங்கள், வணிக வளாகங்கள் என அனைத்தையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, போதைக்கு அடிமையான சிலர் டாஸ்மாக் கடையை உடைத்து மதுபானத்தைக் கொள்ளையடித்துச் செல்லும் சம்பவம் அரங்கேறி வருகிறது.
இதனால், டாஸ்மாக் கடையில் உள்ள மதுபானங்கள் அரசு கிடங்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளன.
இதுதவிர, சட்டவிரோதமாக மதுபானம் விற்பவர்கள் மீதும் காவல் துறையினர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த சூழலில், மதுபானம் கிடைக்காமல் போதை ஆசாமிகள் கஞ்சா போன்ற போதைப் பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இதனால் சென்னையில் கஞ்சா விற்பனை செய்யும் நபர்களையும் காவல் துறையினர் கண்காணித்து கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை கே.கே. நகர்ப் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், கே.கே.நகர் காவல் துறையினர் இன்று காலை சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
அப்போது, அங்கு பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்த போரூர் பகுதியைச் சேர்ந்த மேத்யூ பிரதீப் (40) என்ற நபரை அவர்கள் கைது செய்தனர்.
தொடர்ந்து, இவரிடமிருந்து சுமார் 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்து, ஊரடங்கு நேரத்தில் கஞ்சா எப்படி கிடைத்தது என்பது குறித்து மேத்யூ பிரதீப்பிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:ஊரடங்கால் தவித்த வெளிமாநில மாணவர்கள்: 300 பேருந்துகளில் சொந்த ஊருக்கு அனுப்பிய உ.பி அரசு!