சென்னை:மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில் கிஷோர் வைக்யானிக் புரோட்சகான் யோஜனா(Kishore Vaigyanik Protsahan Yojana) திட்டம் மூலம் அறிவியலில் ஆர்வமுள்ள பதினோராம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறிவுத் தேர்வு நடத்தி, தகுதியானவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
இந்த திறனறிவுத் தேர்வானது ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் நடைபெறும் என அறிவிக்கபட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன் தாக்கல் செய்த பொது நல மனுவில், "தமிழ்நாட்டில் 60 விழுக்காடு மாணவர்கள் தமிழ் வழியில் படித்துள்ளதால், அந்தந்த மாநில மொழிகளில் தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, பிற மொழி பேசுபவர்களுக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும் எனக் கூறி திறனறிவுத் தேர்வை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.