சென்னை: கே.கே. நகரை சேர்ந்தவர் பாஜக ஆதரவாளரும், யூ-ட்யூபருமான கிஷோர் கே.சாமி. இவர் சமூக வலைதளங்களில் திமுக, அதன் ஆதரவு கட்சிகளை தொடர்ந்து தரக்குறைவாக விமர்சித்து வந்தார்.
செங்கல்பட்டு சிறையில் கிஷோர் கே சாமி
சமீபத்தில் இவர் தனது வலைதளப் பக்கத்தில் முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா, கருணாநிதி, தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோரை இழிவுப்படுத்தும் விதமாக கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரவிசந்திரன் ஜூன் 10ஆம் தேதி சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இப்புகாரின் அடிப்படையில் அவர் மீது கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு செயல்படுதல், பொது அமைதிக்கு எதிராக கருத்தை பரப்புதல், சமூகத்துக்கு எதிராக குற்றம் செய்ய தூண்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குபதிவு செய்தனர். தொடர்ந்து ஜூன் 14ஆம் தேதி காவல் துறையினர் அவரை கைது செய்து செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.
அடுத்தடுத்து வழக்குகள் பதிவு:
இதையடுத்து கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் பெண் பத்திரிகையாளர் ஒருவரை தரக்குறைவாகப் பேசியதாக, மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கிஷோர் கே சாமி மீது மேலும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவரை சமூக வலைதளத்தில் மத ரீதியில் சித்தரித்து தரக்குறைவாக பேசியதாக அவர் மீது மீண்டும் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையிடம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜாமீன் மனு தள்ளுபடி
இந்நிலையில் இன்று அவர் எழும்பூர் மத்திய குற்றப்பிரிவு நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு ஜூலை 7ஆம் தேதிவரை நீதிமன்றக் காவல் வழங்கி மீண்டும் செங்கல்பட்டு சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் அவர் முன்னாள், இந்நாள் முதலமைச்சர்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் பிணை கோரி தாம்பரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அவதூறுப் பேச்சால் பாஜக ஆதரவாளர் கிஷோர் கே.சுவாமி அதிரடி கைது