கிசான் நிதியுதவி திட்ட முறைகேடு - வரவு வைக்கப்பட்ட தொகையை திரும்பப் பெறும் நடவடிக்கை தீவிரம்! - கிசான் நிதி உதவி திட்டம்
சென்னை: கிசான் நிதியுதவி திட்டத்தில் தகுதியில்லா நபர்களின் பெயர்களை நீக்கம் செய்து, அவர்கள் தொடங்கிய வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட தொகையை திரும்பப் பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
![கிசான் நிதியுதவி திட்ட முறைகேடு - வரவு வைக்கப்பட்ட தொகையை திரும்பப் பெறும் நடவடிக்கை தீவிரம்! கிசான்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8853481-895-8853481-1600460441184.jpg)
கிசான் திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட தகுதியற்ற பயனாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டன. சம்பந்தப்பட்ட வங்கிகள் மூலமாக தொகையை மீட்டெடுத்து வழிகாட்டு நெறிமுறைகளின் படி அரசு கணக்கில் சேர்க்கப்பட்டு வருகிறது.
அதன்படி, மொத்த 8 ஆயிரத்து 81 தகுதியற்ற பயனாளிகளில் செப்டம்பர் 17ஆம் தேதி வரை 4 ஆயிரத்து 264 பயனாளிகளிடமிருந்து ரூபாய் 1 கோடி 60 லட்சத்து 20 ஆயிரம் பிடித்தம் செய்யப்பட்டு அரசு கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 3 ஆயிரத்து 817 பயனாளிகளிடமிருந்து உரிய தொகையை வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் மூலம் வசூலித்து அரசு கணக்கில் செலுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் தகுதியற்ற பயனாளிகள், அவர்களை தவறுதலாக சேர்த்த கணினி மையங்கள் உரிமையாளர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களையும் கண்டுபிடித்து, அவர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்கும்படி சிபிசிஐடியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டு இதுவரை
மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.