தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகிழ்ச்சியான, பாதுகாப்பான தீபாவளி - மருத்துவர் சாந்தி மலர் கூறும் அறிவுரை

மகிழ்ச்சியான, பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாடுவது குறித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தி மலர் ஈடிவி பாரத்திற்கு பேட்டி அளித்தார்.

மகிழ்ச்சியான, பாதுகாப்பான தீபாவளி
மகிழ்ச்சியான, பாதுகாப்பான தீபாவளி

By

Published : Oct 31, 2021, 9:15 PM IST

சென்னை: தீபாவளி பண்டிகை என்றாலே கொண்டாட்டம் தான். புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பரிமாறி கொள்வோம். இதில் பட்டாசுகளை எவ்வாறு பாதுகாப்புடன் வெடிப்பது என்று அரசு பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

பட்டாசு வெடித்து ஏற்படும் விபத்துக்களின் போது உண்டாகும் தீக்காயங்களுக்கு எவ்வாறு பாதுகாப்பான முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது குறித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தி மலர் ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், "குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர். பட்டாசுகளை எப்போது வெடித்தாலும் பாதுகாப்பான முறையில் வெடிக்க வேண்டும்.

தீக்காய முதலுதவிகள்

தற்போது வரும் வெடிபொருட்கள் பயங்கரமான பின்விளைவுகளை உருவாக்குவது போல் வருகின்றன. பெற்றோர்கள் அருகிலிருக்கும் போது குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது ஒரு வாளி தண்ணீர், மணலை அருகில் வைத்துக்கொள்ள வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது முடிந்தவரை காட்டன் துணி அணிவது நல்லது.

இனிய தீபாவளிக்கு சில குறிப்புகள்

சானிடைசர் பயன்படுத்த கூடாது

பட்டாசு பற்ற வைக்கும்போது சிறிது தூரம் தள்ளி நின்று பற்ற வைக்கவேண்டும். சங்கு சக்கரம் போன்ற வெடிகளை நீளமான குச்சி போன்ற பொருட்களை வைத்து தீ பற்ற வைக்க வேண்டும்.

எதிர்பாராதவிதமாக தீக்காயம் ஏற்பட்டால் அதன் மீது இங்க் (Ink) கொட்டுவது, மஞ்சள் தடவுவது, பத்து போடுவது போன்றவற்றை செய்யக் கூடாது. தண்ணீரில் தீக்காயம் பட்ட பகுதியினை நனைக்க வேண்டும். இது மிகவும் நல்லது. மேலும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

பட்டாசு வெடித்து முடித்தவுடன் கைகளை நன்கு கழுவ வேண்டும். சானிடைசர் அருகில் வைத்துக்கொண்டு பட்டாசு வெடிப்பது தவறானது. மேலும் கைகளில் பயன்படுத்திவிட்டு பட்டாசு வெடிப்பதும் தவறானது. சானிடைசரில் ஆல்கஹால் (Alcohol) இருப்பதால் எளிதில் தீப்பற்றும்.

முன்பு காலங்களில் பட்டாசில் உள்ள வெடிமருந்துகளின் வீரியத் தன்மை குறைவாக இருந்தது. தற்போது வரும் பட்டாசுகளில் அதிக வெடிமருந்துகள் கலப்பதால் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. தொடர்ந்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் சில விபத்துக்கள் ஏற்படுகிறது.

மருத்துவர்களை அணுக வேண்டும்

பட்டாசு தீ காயத்திற்கு சிகிச்சை அளிக்க அனைத்து மருத்துவமனைகளிலும் வசதிகள் உள்ளன. ஆரம்ப நிலை சிகிச்சைகள் அங்கு அளிக்கப்பட்டாலும், தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்பான தீபாவளிக்கு மருத்துவர் சாந்தி மலர் கூறும் அறிவுரைகள்

இங்கு தீபாவளி பண்டிகைக்காக 20 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பிரிவு முழுவதுமுள்ள படுக்கைகளை பயன்படுத்தவும் தயாராக உள்ளோம். தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர் உடலில் எவ்வளவு விழுக்காடு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை மருத்துவர்கள் ஆய்வு செய்வர். அதன் அடிப்படையில் அவர்களுக்கு தேவையான சிகிச்சை வழங்குவர். நுரையீரல் போன்ற பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

பட்டாசை பற்ற வைக்கும்போது முகத்தை அருகில் கொண்டு செல்லக் கூடாது. எதிர்பாராதவிதமாக கண்களில் பட்டாசு பட்டு தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக தண்ணீர் மூலம் முகத்தை நன்றாக கழுவ வேண்டும். பின்னர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். மேல் சிகிச்சை தேவைப்பட்டால் கண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற வேண்டும்" எனத் தெரிவித்தார்.

பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க வேண்டும்

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி தீவிர சிகிச்சை பிரிவு உதவி மருத்துவர் பிரசன்னா கூறும்போது, "பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். தீபாவளி பண்டிகையின் போது தீ காயத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறைந்து வருகிறது. பொதுமக்கள் மிகவும் பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க வேண்டும். தீக்காயங்கள் ஏற்பட்டு 60 விழுக்காட்டிற்கு மேல் பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றுவது மிகவும் சிரமம் " என தெரிவித்தார்

இதையும் படிங்க:“நமக்கு நாமே” திட்டம்: அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுத்த வேண்டும் - மாநகராட்சி

ABOUT THE AUTHOR

...view details