சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறுநீரகவியல் துறை சார்பில் மறு சுழற்சியற்ற ஒற்றைப் பயன்பாட்டு ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை முறை எனப்படும் டயாலிசிஸ் மருத்துவ முறையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், "ஒரு நபருக்கு டயாலிசிஸ் சிகிச்சை எனப்படும் ரத்த மறுசுழற்சி அடிப்படையில் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை செய்யப்பட்டுவருகிறது. அந்த சிகிச்சைக்காக ஒரு நபருக்கு ரத்த சுத்திகரிப்பு முறையானது குறைந்தது மூன்று நாள்களுக்கு ஒருமுறை மாற்றப்படும்.
அதிகபட்சமாக வாரம் ஒருமுறை மாற்றப்படும். இதற்காக உடலில் ஒரு கருவி பொருத்தப்படும். அந்தக் கருவியை மறுசுழற்சி மூலம் ஆறு முதல் எட்டு முறை சுத்தம் செய்து பயன்படுத்த முடியும். அவ்வாறு சுத்தம் செய்யும்பொழுது நோயாளிக்கும், மருத்துவர்களுக்கும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனால், இந்தியாவில் முதல்முறையில் ஒரே கருவி மூலம் டயாலிசிஸ் செய்யப்படும் கருவி அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால், தொற்று பரவாது பாதுகாப்பானது. கரோனா காலத்தில் கரோனா அல்லாத தொற்று நோய்களிலும் கவனம் செலுத்தி முன்னெச்சரிக்கையுடன் கவனம் செலுத்த வேண்டும்.