தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாகக் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துவருகிறது. அதனைத் தடுக்கும் முயற்சியில் மாநகராட்சி ஊழியர்கள் களமிறங்கியுள்ளனர்.
இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வர் வசந்தாமணி ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், "தமிழ்நாட்டில் கடந்த 20 நாள்களாகக் கரோனா தீநுண்மி தொற்று விகிதம் அதிகமாக உள்ளது. நேற்று 1,779 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது.
இது இரண்டாவது அலையின் தாக்கமாகவும் இருக்கலாம். பள்ளிகள், நிறுவனங்கள், கல்லூரிகளில் அதிகப்படியானோர் பாதிக்கப்படுகின்றனர். பொதுமக்கள் வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றாமலும், முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும், சமய மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கின்றனர்.
முகக்கவசம் அணியாமல் 20 நிமிடங்களுக்கு மேல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் இருந்தால் அவர்களுக்கும் கண்டிப்பாகப் பாதிப்பு ஏற்படும். மேலும் அரசு, பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரோனா தீநுண்மி தொற்று மரபணு உருமாற்றம் பெற்ற பின்னர் ஜெர்மனி, பிரிட்டன் போன்ற நாடுகளில் அதன் பரவல் வேகம் அதிகமாக உள்ளது. தேசிய வைராலஜி ஆய்வு நிறுவனம், புனேவில் இரண்டு தீநுண்மிகள் உருமாறி உள்ளதாகவும், அந்தத் தீநுண்மி வேகமாகப் பரவுகிறது எனவும் கூறியுள்ளது.