சென்னை:அதிகரித்துவரும் மக்கள்தொகை பெருக்கத்தாலும், வாகனங்கள் பெருக்கத்தாலும் சென்னை நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையில் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அடுத்தபடியாக கிளாம்பாக்கத்தில் ஒரு புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும், என கடந்த 2019ஆம் ஆண்டு இடம் தேர்வு செய்யப்பட்டு, அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி பணிகளைத் துவங்கி வைத்தார்.
அரசுப் பேருந்துகள், மாநகர பேருந்துகள், தனியார் ஆம்னி பேருந்துகள் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக நிறுத்துமிடத்துடன் 90 ஏக்கர் பரப்பளவில் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய கட்டுமானப்பணி நடைபெற்று வந்தது. கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணிகளை விரைந்து முடித்து நகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வேண்டும் என சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் திட்டம் தீட்டியது.
ரூ.397.15 கோடி மதிப்பீட்டில் இந்த பணிகள் துவங்கி நடைபெற்று வந்த நிலையில் கரோனா தொற்றால் போடப்பட்ட ஊரடங்கால் பணிகள் பாதிக்கப்பட்டது. பின்னர் ஆட்சி மாற்றம் எற்பட்டு திமுக ஆட்சி ஏற்றபின் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணிகளை விரைவாக முடிக்கும்படி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் படி கிளாம்பாக்கம் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் போர்கால அடிப்படையில் செயல்பட்டு வந்தது.
மூன்று ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சிஎம்டிஏ அமைச்சராக இருந்த முத்துச்சாமி கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு செய்து, 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு கிளாம்பாக்கம் பேருந்துநிலையம் பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிவித்தார். அதனையடுத்து பணிகள் முடுக்கிவிடப்பட்ட நிலையிலும் குறிப்பிட்ட நேரத்தில் பணிகள் முடிக்கப்படாததால் பொங்கலுக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரவில்லை.
இதனை அடுத்து சிஎம்டிஏ அமைச்சராக சேகர்பாபு பொறுப்பேற்றார். இதனையடுத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை ஆய்வு செய்த அவர், விரைவில் பணிகளை முடிக்க உத்தரவிட்டார். பணிகள் நிறைவு பெற உள்ள நிலையில் விரைவில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட உள்ளது.
இந்தநிலையில் தற்போது முதல் கட்டமாக 100 அரசு பேருந்துகள் மூலம் சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து வரும் அரசு பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உள்ள சென்று மீண்டும் வெளியே வந்து ஊரப்பாக்கம் வழியாக சென்று மீண்டும் வண்டலூர் கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் செல்வது போல் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. மேலும் விரைவில் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிபிசிஎல் நிறுவனம் அதிகப்படியான எண்ணெய்யை தேக்கி வைத்ததே கசிவுக்கு காரணம்; பசுமைத் தீர்ப்பாயத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்