சென்னை: சென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பகுதியில் கோயம்பேடு அடுத்தபடியாக மிகப்பெரிய பேருந்து நிலையம் அமைக்க கடந்த 2019ஆம் ஆண்டு 397.15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டன.
அதன் பின்பு கரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து பணிகளும் சுமார் ஒன்றரை ஆண்டுகள் முடங்கி போயிருந்தன. பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மீண்டும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் துவங்கப்பட்டு நடைபெற்று வந்தது.
இந்த புதிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கோயம்பேடு பேருந்து நிலையத்தை விட அதிக சிறப்பம்சங்களுடன் நவீனமயமாக கட்டப்பட்டு வருகிறது. 90 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படும் இந்த பேருந்து நிலையத்தில் அரசு விரைவு பேருந்துகள், மாநகர பேருந்துகள், தனியார் ஆம்னி பேருந்துக்கள் தனித்தனியே நிறுத்தமிடத்துடன் உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்படுகின்றன.
இந்த நிலையில் சுமார் மூன்று ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வந்த நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை விரைவில் கட்டி முடித்து சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டமிட்டது. ஆனால் பணிகள் மிகவும் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கிளாம்பாக்கம் பேருந்து நிலையப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் சில மாதங்களுக்கு முன்பு, அப்போதைய சிஎம்டிஏ அமைச்சராக இருந்த முத்துசாமி நேரடியாக பணிகளை ஆய்வு செய்து கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பணிகள் 82 சதவீதம் முடிந்து விட்டதாகவும், 2023 பொங்கலுக்கு பயன்பாடுக்கு கொண்டு வரப்படும் என்றும் உறுதியாக தெரிவித்தார்.
ஆனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பணிகள் முடிவடையாமல் பொங்கலுக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இது குறித்து சிஎம்டிஏ அதிகாரி ஒருவர் நம்மிடம் கூறுகையில், "முதலமைச்சர் ஸ்டாலின் விரைவாக பணிகளை முடிக்க உத்தரவிட்டதன் பெயரில் போர்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த மழையின் போது கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணிகள் பாதிப்படைந்து தொய்வு ஏற்பட்டது.
எனவே இந்த ஆண்டு பொங்கல் நேரத்தில் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என கூறிய நிலையில் கடந்தாண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த மழையின் காரணமாக திறக்க முடியாமல் போனது. கிட்டத்தட்ட இறுதி கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது" என்று தெரிவித்தார்.