சென்னை: அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகளைப் பெற்று, முதல்முறையாக ஒரே மருத்துவமனையில் 2 பேருக்கு ஒரே நாளில் சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகளை தானமாகப் பெற்று மாற்று அறுவை சிகிச்சை செய்ததால், சிறுநீரகம், கணையம், கண் பெற்று 4 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
மூளை சாவில் இறந்தவரின் உடல் தானம்:இதுகுறித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்திமலர் கூறும்போது, ”சென்னையில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட 31 வயது ஆண் , தலையில் பலத்தக்காயத்துடன் வந்தவருக்கு நரம்பியல்துறை நிபுணர்கள் அறுவை சிகிச்சை அளித்தனா். அறுவை சிகிச்சைக்குப் பின்னர் தொடர்ந்து கண்காணித்து வந்தோம். மேலும், அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடையும் நோயாளிகளை கண்டறிய மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
மருத்துவத்துறையின் விதிமுறைகளின் படி , அவரின் மூளை மெல்ல செயலிழந்து வருவதை உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து அவரின் பெற்றோரிடம் உடல் உறுப்பு தானம் குறித்து எடுத்துக் கூறப்பட்டது. அந்த நோயாளியின் பெற்றோரின் அனுமதியுடன் 2 சீறுநீரகங்கள், கணையம், கண் ஆகியவை தானமாக பெறப்பட்டன.
ஒரே நாளில் இருவருக்கு அறுவை சிகிச்சை:உடல் உறுப்பு தானம் பெறும் அரசு மருத்துவமனையில் ஒரு உறுப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற விதியின்படி 28 வயது பெண்ணிற்கு முதலில் ஒரு சிறுநீரகம் மாற்று அறுவை செய்யப்பட்டது. மற்றொரு சிறுநீரகம் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அங்கு நோயாளிக்கு பொருத்த முடியததால், மீண்டும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது. ஏற்கனவே சிறுநீரகம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 39 வயது பெண்மணிக்கு பொருந்தியதால், உடனடியாக அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.