சென்னை: கடந்த 2019ஆம் ஆண்டு முகப்பேரை சேர்ந்த ராஜேஷ் என்ற தொழிலதிபரை அவரது குடும்பத்தினருடன் கடத்திச் சென்று பண்ணை வீட்டில் அடைத்து வைத்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை போலீஸ் அதிகாரிகளின் உதவியுடன் ஒரு கும்பல் எழுதி வாங்கியது.
இதுகுறித்து ராஜேஷ் திருமங்கலம் போலீசில் புகார் செய்தார். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதில் கோடம்பாக்கம் ஸ்ரீ, திருமங்கலம் காவல் உதவி ஆணையர் சிவக்குமார், இன்ஸ்பெக்டர் சரவணன், சப் இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் மற்றும் 3 காவலர்கள் உள்ளிட்ட 10 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் கோடம்பாக்கம் ஸ்ரீ மட்டும் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சப் இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன், காவலர் கிரி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, குற்றச்சாட்டுக்கு ஆளான ஆய்வாளர் சரவணன் உள்பட 5 பேரை பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், உதவி ஆணையரை பணியிடை நீக்கம் செய்ய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி, சொத்து புகார்தாரர் பெயருக்கு மாற்றப்பட்டு விட்டதா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, இல்லை என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, காசு கொடுத்து சொத்து வாங்கியவர்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பது தான் நீதிமன்றத்தின் எண்ணம் என தெரிவித்த நீதிபதி, காவல்துறை அதிகாரிகளான மனுதாரர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தீவிரமானது என கூறி முன்ஜாமீன் வழங்க முடியாது என்றார்.
இதையடுத்து, மனுவை திரும்ப பெறுவதாக மனுதாரர் தரப்பில் கூறியதை ஏற்றுக் கொண்டு, மனுவை திரும்ப பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க :காவலர்களுக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை: அரசாணை வெளியீடு