சென்னை: ஶ்ரீரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைதன்யா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “கிடா” (Goat). இப்படம் அறிமுக இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில், பூ ராமு, காளி வெங்கட் முதன்மை பாத்திரத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஆகும். இப்படம் வாழ்வியலை அழகாகச் சொல்லும் ஒரு அழுத்தமான கலைப்படைப்பாக உருவாகியுள்ளது. இந்நிலையில் ''கிடா'' திரைப்படம் சர்வதேச விழாக்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
சமீபத்தில், இந்தியன் பனோரமா மற்றும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆகஸ்ட் 11 முதல் 20 வரை நடக்கும் 14வது திரைப்பட விழாவில் (Indian film festival of Melbourne) திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த கிடா திரைப்படத்தில் பூ ராமு, காளி வெங்கட் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளனர். மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் மற்றும் ஒரு ஆட்டுக்கும் உள்ள உறவுப்பிணைப்பை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
பொதுவாக கிராமம் சார்ந்த படங்கள் என்றாலே அதற்கான கதையும், நிகழ்வும் ஆழமான ஒரு கருத்தை அழகாகவும், அழுத்தமாகவும் சொல்லும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும். அந்த வகையில் இந்த ''கிடா'' படம் உருவாகி இருப்பது சர்வதேச அளவில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.