இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா தொற்றின் இரண்டாம் அலையின் வேக வீச்சால், பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடும் முதல் வரிசையில் உள்ள மாநிலம் என்ற நிலையை உணர்ந்து, பதவியேற்கும் முன்பிருந்தே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கரோனா ஒழிப்புக்கான பணிகளைத் தீவிரமாக போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட்டார்.
அயராத கடமை உணர்வோடு...
ஓய்வறியாது தனது அரசு இயந்திரத்தை அதிவேகமாக சுழலவிட்டு, நோயாளிகளைக் காப்பாற்றிட படுக்கை, ஆக்சிஜன், மருந்துகள் கிடைப்பதில் தட்டுப்பாடு உள்ளிட்டவற்றை சரிப்படுத்த போர் அறை (War Room) ஏற்பாடு செய்ததோடு, அங்கும்கூட ‘அகால நேரத்தில்கூட’ அயராத கடமை உணர்வோடு சென்று ஆய்வு செய்து நேரிடையாக குறை தீர்த்த செய்தி ஏடுகளில் வந்தன; குறை சொன்னவர்களும் முதலமைச்சரைப் பாராட்டி செய்தி வெளியிட்டனர்!
24 நாள்களில் 24 மணிநேர உழைப்புடன்...
ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்க செறிவூட்டிகளை ஏராளம் பெற்று, படுக்கைகளுடன் இணைந்த புதிய ஏற்பாடு, ஆக்சிஜன் குழாய்களை சிங்கப்பூர் மற்றும் பல நாடுகளிலிருந்து அவசரமாக வரவழைத்தல், மத்திய கூட்டரசிடம் - பிரதமர் முதல் மத்திய அமைச்சர்களிடம் தொலைபேசியில் பேசியும், கடிதம்மூலமும் கூடுதலாக ஆக்சிஜன், தடுப்பூசிகள் பெற்று தடுப்பூசிபோடும் திட்டத்தை நாளும் பெருக்குதல், கூடுதலாக ஆக்சிஜன்களைத் தயாரிக்கத் திருச்சி ‘பெல்’ தொழிற்சாலை, செங்கற்பட்டில் 6 ஆண்டுகளாக பெரிய முதலீடு செய்து இயங்காத மத்திய அரசின் தொழிற்சாலையை குத்தகைக்குத் தர வேண்டுகோள், தென்மாவட்டங்களில் மதுரை வரையில் சென்று ஆய்வு - மேற்கு மாவட்டங்களில் தொற்றுப் பரவல் அதிகம் உள்ள பகுதியில் இரண்டு முறை நேரில் ஆய்வு;
கரோனா தடுப்பு பணியில் ஸ்டாலின் இதற்கிடையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த குடும்பத்தினரின் வாரிசுகளுக்கு அரசு வேலை நியமனங்கள், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் கைது செய்து சிறையில் அவதிக்கும், மன உளைச்சலுக்கும் ஆளானவர்களுக்கு இழப்பீடு, ஆறுதல் தொகை அளித்தல், கூடுதலாக 2000-த்துக்கும் மேல் மருத்துவர்களும், செவிலியர்களும் நியமனம் செய்யும் ஆணை பிறப்பித்து, மருத்துவ அடிக்கட்டுமானத் தேவைகளை பலப்படுத்திட ஏற்பாடுகள், தடுப்பூசிகளை வெளிநாடுகளிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்ய பன்னாட்டு ஒப்பந்தம் கோரி, அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக முனைப்பு, கோவையில் கரோனா தொற்று நோயாளிகளுக்குத் தன்னலம் கருதாது ஆறுதல் அளிக்க கவச உடையுடன் சென்று நேரில் ஆறுதல் - இவ்வளவு பணிகள் - அப்பப்பா.... வியக்கத்தக்க அதிர்ச்சி தரும் அடுக்கடுக்காக மூச்சுவிட முடியாத இடைவெளியில் நிகழ்த்திடும் அவருடன் உழைக்கும் அரசு இயந்திரமே வேகத்தில் திணறும் நிலை - செயல்பாட்டின் புயலாக மாறி, புதுவகை ஆட்சி செய்கிறார் - 24 நாள்களில் 24 மணிநேர உழைப்புடன்!
விளைவறியாது விளையாடாதீர்கள்
எவரையும் குறை கூறாது, இன்னா செய்தாரை நாண வைக்கும் வகையிலே அவர்களுக்கும் நல்லதை அளித்து, ஒப்பாரிலாத ஓய்வு அறியா முதலமைச்சராக உயர்ந்து நிற்கிறார் - பொதுவானவர்களின் மதிப்பீடு இது! எதிர்த்தவர்கள் பலர் மவுனமாகிவிட்ட நிலையில், கோவை பாஜகவினரின் கண்களுக்கு மட்டும் முதலமைச்சர் ஸ்டாலின்மீது காழ்ப்புணர்வு - அது வேறு ஒன்றுமில்லை - தங்களது அடிமை ஆட்சி இல்லையே - சாதனைகளில் தங்களை அலற வைக்கும் ஆட்சி அல்லும் பகலும் ராக்கெட் வேகத்தில் நடைபெறுகிறதே - என்ன செய்தாலும் தம்மால் இனித் தலைதூக்க முடியாது என்பதால், சலசலப்புக் காட்டுகின்றனர்போலும்! அவர் அதைப் பொருட்படுத்தாது - தனது கடமையையே கண்ணாகக் கருதி உழைத்துக் கொண்டுள்ளார்! ‘‘கண்ணாடி வீட்டிலிருந்து கற்கோட்டைமீது கல்லெறியும்‘’ கயமைத்தனத்தை விட்டுவிடுங்கள். விளக்கை நோக்கும் விட்டில்களே, விளைவறியாது விளையாடாதீர்கள் எச்சரிக்கை! எச்சரிக்கை!!" என்று குறிப்பிட்டுள்ளார்.