சென்னை:கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் அதிகளவு கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில், நாட்டில் கரோனா வைரஸ் பரவல் குறையத் தொடங்கியதாலும், பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்காகவும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுவருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் கரோனா வைரஸ் அச்சுறுத்தல்களுக்கு இடையே பிகார் சட்டப்பேரவைத் தேர்தலை பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் ஒப்புதல் தெரிவித்தது.
இந்தத் தேர்தலில் தற்போதைய முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஜேடியு கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்தது. அதேபோல, லாலு பிரசாத் யாதவ்வின் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் மகா கூட்டணி அமைத்தது.
இந்தத் தேர்தலில் பாஜக-ஜேடியு கூட்டணி கட்சியே வெற்றி பெறும் எனத் தேர்தலுக்கு முந்தைய கருத்துகணிப்புகள் கூறிவந்தாலும், தேர்தல் நடைபெற்றதற்குப் பின் பலரும் காங்கிரஸின் மகா கூட்டணியே வெற்றி பெரும் எனத் தெரிவித்தனர்.
அதைப் போலவே, காலை சுமார் 10.30 மணிவரை முன்னணி பெற்று வந்த மகா கூட்டணி, திடீரென பின்னடைவை சந்தித்து வந்தது. தற்போதைய நிலவரப்படி பிகார் தேர்தலில் பாஜக-ஜேடியு தலைமையிலான கூட்டணியே முன்னணியில் இருந்து வருகிறது.