பாஜக-வில் இணைந்தபின் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, 'காங்கிரஸில் சுதந்திரமாக பேசக்கூட அனுமதி இல்லையென்றால் அந்த கட்சி எப்படி நாட்டிற்கு நல்லது செய்யும்? சிந்திக்கக் கூடிய மூளை வளர்ச்சி குன்றிய கட்சி காங்கிரஸ்"என்று கடுமையாக விமர்சித்தார்.
மாற்றுத்திறனாளிகளை அவமானப்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்த நடிகை குஷ்பு மீது காவல் நிலையங்களில் புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் நல உரிமை சங்க மாநில பொதுச் செயலாளர் ஜான்சிராணி தெரிவித்திருந்தார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை மூளை வளர்ச்சி குன்றிய கட்சி என்று அழைத்தது குறித்து குஷ்பு வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
“நான் எனது சொந்த குடும்பத்தில் மனநலக் கவலைகளுடன் போராடியுள்ளேன். திறமையான தலைவர்கள், நுண்ணறிவு, ஆற்றல்மிக்க நண்பர்கள் மனச்சோர்வுடன் இருப்பதையும் கடந்துவந்துள்ளேன்.
மக்களிடையே பன்முகத்தன்மையை நான் உணர்ந்தது மட்டுமல்லாமல், அவர்களின் உணர்வுகளையும் மதிக்கிறேன், கடந்த காலங்களில் பல தலைவர்களும் இதேபோன்ற கவனக்குறைவான செயல்களை செய்திருக்கிறார்கள் என்பதையும், பலருக்கு எனது கவனக்குறைவான கருத்து மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கும் என்பதையும் நான் உணர்கிறேன், அதேபோல் இனி எந்த ஒரு சூழலிலும் எப்போதும் இதுபோன்ற செயலை, கருத்தை தெரிவிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
மனநல குறைபாடு உள்ளவர்களின் குரல்கள் மதிப்பிடப்பட வேண்டும், கேட்கப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்த நான் என்னை அர்ப்பணிக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
மாற்றுதிறனாளிகள் குறித்து தவறுதலாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்து குஷ்பு வெளியிட்டுள்ள செய்திக்கு, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் நல உரிமை சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.