தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'குஷ்பூவிற்கெல்லாம் பதவி அளிக்கமுடியாது என பாஜகவினர் பேசுவது கேட்கிறதா?' - குஷ்புவை விமர்சிக்கும் மகிளா காங்கிரஸ்

சென்னை: குஷ்பூவிற்கெல்லாம் பதவி கொடுக்க முடியாது என பாஜகவினர் தொலைக்காட்சி விவாதங்களில் பேசுவது கேட்கிறதா? என தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் ஆர். சுதா கேள்வி எழுப்பியுள்ளார்.

Khushbu has begun to pour mud on Congress bloc to justify party-turned-opportunism says mahila Congress
Khushbu has begun to pour mud on Congress bloc to justify party-turned-opportunism says mahila Congress

By

Published : Oct 15, 2020, 12:35 PM IST

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தற்போது பாஜகவில் இணைந்துள்ள குஷ்பூவால் காங்கிரஸ் கட்சியின் உண்மை தொண்டர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியுமா?

காங்கிரஸில் இணைந்த போது உங்களுக்கு தரப்பட்ட மரியாதை நினைவிருக்கிறதா?ஆனால் இன்று உங்கள் நிலைமை என்ன? இரண்டு நாள்களுக்கு முன்பு அத்தனை ஆரவாரத்தோடு பாஜகவில் இணைய டெல்லி சென்ற உங்களை யார் வரவேற்றார்கள்? பத்தோடு பதினொன்றாக உங்களை இணைத்த கட்சிக்காகவா தொண்டர்களின் இயக்கமான காங்கிரஸை பழிக்கிறீர்கள்?

தேசிய செய்தி தொடர்பாளர் என்ற உயரிய பொறுப்பை காங்கிரஸ் உங்களுக்கு அளித்ததே? இப்போது குஷ்பூவிற்கெல்லாம் பதவி கொடுக்க முடியாது என பாஜகவினர் தொலைக்காட்சி விவாதங்களில் பேசுவது கேட்கிறதா?

சிந்திக்க தெரியாத கட்சி என்று கூறியிருக்கிறீர்களே? ஆறு ஆண்டுகளாக உங்கள் மூளை எங்கிருந்தது என்று நான் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்?

உழைப்பவர்களுக்கு பலன் கிடைப்பதில்லை என்கிறீர்களே? அடிமட்டத் தொண்டர்களாக இருந்து இன்று காங்கிரஸ் சார்பாக சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத்தை அலங்கரிக்கும் சகோதரிகள் ஜோதிமணி, விஜயதரணி, ரம்யா, ஹரிதாசை எல்லாம் உங்களுக்குத் தெரியாதா?

எல்லா காலகட்டத்திலும் எங்களைப் போன்றவர்களின் உழைப்பிற்கு காங்கிரஸ் கட்சி அங்கீகாரம் வழங்கியிருக்கிறதே தவிர ஒதுக்கியதுமில்லை, ஒடுக்கியதுமில்லை. ஆறு ஆண்டுகளில் காங்கிரஸ் உங்களுக்கு அளித்த அதீத வாய்ப்புகளுக்கான நன்றி கொஞ்சமாவது இருக்கிறதா?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் ஊராட்சித் தலைவர்களிடம் கேளுங்கள். ராஜிவ் காந்தி கொண்டு வந்த சட்ட திருத்தத்தால் பதவி கிடைத்ததை சொல்வார்கள். 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் பயன்பெறும் பெண்களிடம் கேட்டால் காங்கிரஸ் கட்சியினால் பொருளாதாரம் சுதந்திரம் பெற்றதை சொல்வார்கள்.

பெண்களுக்கான வாய்ப்பு குறித்து பேசுகிறீர்களே, பெண்களுக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் நீங்கள் இப்போது இணைந்திருக்கும் பாஜக கட்சியின் நிலைப்பாடு என்ன? அசுர பலத்துடன் ஆட்சியிலிருக்கும் பிரதமர் மோடி மகளிருக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை சட்டமாக்க முன்வருவாரா? உங்களால் அதனை வலியுறுத்த முடியுமா?

ஹத்ராஸ் விவகாரத்தில் மோடியை கடுமையாக விமர்சித்து விட்டு மனசாட்சிக்கு விரோதமாகவே பேசினேன் என்கிறீர்களே, உண்மையிலேயே உங்களுக்கு மனசாட்சி என்ற ஒன்று இருந்தால் அதனிடம் கேளுங்கள். உண்மை நிலையை அது உங்களுக்குச் சொல்லும்.

அழுத்தத்திற்கு உட்பட்டோ அல்லது எந்த பலனையும் எதிர்பார்த்தோ பாஜகவில் நீங்கள் இணைந்திருக்கிறீர்கள், அது உங்கள் விருப்பம். அதற்காக தொண்டர்களால் கட்டி எழுப்பப்பட்ட காங்கிரசஸை களங்கப்படுத்த முயல வேண்டாம்.
விமர்சனங்கள் தொடர்ந்தால் உரிய பதிலடி கிடைக்கும் என்பதை எச்சரிக்கையாகவே கூற விரும்புகிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details