சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி'-யை சென்னையில் நடத்த முடிவு மேற்கொண்டதைத் தொடர்ந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்ட அரசின் உயர் அலுவலர்கள், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் அனைவருடனும் இணைந்து இந்த போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக நிறைவேற்றியுள்ளார்கள்.
அதனைத் தொடர்ந்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வருகை தந்து கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்துச் சிறப்பிக்குமாறு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த ஜனவரி 4ம் தேதி அன்று புதுடெல்லி சென்று அழைப்பு விடுத்தார்.
இந்த அழைப்பினை ஏற்றுக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜன.19) சென்னைக்கு வருகை தந்து மாலை 6.00 மணிக்கு ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை முறைப்படி தொடங்கி வைக்க உள்ளார். மேலும் இதில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
மேலும் ஒன்றிய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுகள், செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், ஒன்றிய அரசின் உள் விவகாரங்கள், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை இணையமைச்சர் நிசித் பிரமாணிக், தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
இந்த போட்டி ஜனவரி 23ஆம் தேதி துவங்கி ஜனவரி 31ஆம் தேதி வரை நடைபெறும். இந்த விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் மட்டுமல்லாமல் திருச்சி, கோயம்புத்தூர், மதுரை ஆகிய நகரங்களிலும் நடைபெறுகின்றன. அதில், தடகள விளையாட்டுகளான கால்பந்து, கபடி, வாலிபால், ஜூடோ, பளு தூக்குதல், ஸ்குவாஸ், வில்வித்தைகள், குத்துச் சண்டை, பூப்பந்தாட்டம், டேபிள் டென்னிஸ், சைக்கிள், ஜிம்னாஸ்டிக், நீச்சல், ஆக்கி, டென்னிஸ், துப்பாக்கி சுடுதல், யோகா, மல்யுத்தம் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.